2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வந்தாறுமூலை வளாகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

Kanagaraj   / 2014 மே 03 , மு.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் ,தேவ அச்சுதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
 


கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தின் அனைத்து கல்விசார் நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டிருப்பதாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா நேற்று வெள்ளிக்கிழமை மாலை அறிவித்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தொடர்ந்தேர்ச்சையாக மேற்கொண்டு வரும் குழப்பங்கள் காரணமாக இந்த நிலைமை தோன்றியுள்ளது.

கடந்த 30 ஆம் திகதி முதல் மாணவர்களால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்ற நிலையில் இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவினால் வெளியிடப்பட்ட அறிவித்தலில் கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தின் அனைத்து கல்விசார் நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்படுவதாகவும், பல்கலைக் கழக விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களும்  சனிக்கிழமை(03) காலை ஏழு மணிக்கு முன்னர் தங்களது விடுதிகளிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ,
 
கிழக்கு பல்கலைக்கழகத்தில் சில மாணவர்கள் வெளியில் நின்று எனக்கெதிராக கூச்சல்போட்டனர். பின்னர் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு சேதமேற்படுத்தியுள்ளனர்.
 
அத்துடன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒன்றிய தலைவர் கோமகன் என்பவர் என்னை இழுத்து என்மீது தாக்குதல் நடத்தினார்.
 
பல்கலைக்கழகத்தின் சட்டதிட்டங்களை மீறிய மூன்று மாணவர்களுக்கு இன்று வகுப்பு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.அவர்கள் மீதான விசாரணை முடியும்வரையில் இந்த வகுப்புத்தடை அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.அதிலும் என்னைத்தாக்கிய கோமகன் இனியொருபோதும் பல்கலைக்கழகத்தில் கற்காத வகையில் அவருக்கான தடைகள் விதிக்கப்படும்.அவரது பதிவுகளும் ரத்துச்செய்யப்படும்.
 
நானும் கடந்த காலத்தில் இந்த பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்து மாணவர்களின் மன நிலையினை நன்கு அறிந்தவன்.அவர்கள் தங்களது பிரச்சினைகளை என்னுடன் பேசியிருந்தால் அதற்கான தீர்வுகள் வழங்கப்பட்டிருக்கும்.அதன் பிறகு அவர்கள் தங்களது நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம்.ஆனால் எதுவித நடவடிக்கையும் இல்லாமல் அரசியல்வாதியொருவரின் தூண்டுதலின்பேரில் இந்த போராட்டம் ஒரு சில மாணவர்களினால் நடத்தப்பட்டுள்ளது.
 
எவ்வாறாயினும் வகுப்புத்தடைகள் விதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் மீதான விசாரணைகள் முடிந்து அவர்களுக்கு ஓரு தீர்ப்பு வழங்கும் வரையிலும் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுகின்றன என தெரிவித்தார்.


இதேவேளை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு சுகாதார விஞ்ஞான பராமரிப்புப் பீடம், திருகோணமலை வளாகம், கல்லடி சுவாமி விபுலாநந்த இசை நடனக் கற்கைகள் நிறுவகம் ஆகியவற்றின் அனைத்துக் கற்கைகளும் தங்கு தடையின்றி இடம்பெறும் என்றும் உப வேந்தரின் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X