2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகளின் வேண்டுகோள்

A.P.Mathan   / 2014 மே 04 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன், எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சிறிய சிறிய விடயங்களுக்கெல்லாம் பகிஸ்கரிப்பு, ஆர்ப்பாட்டம் என்கின்ற கலாசாரத்திலிருந்து மீண்டு - பிரச்சினைகளை உரிய முறையில் உரியவரை அணுகி தீர்வுகண்டு உங்கள் கல்வி நடவக்கைகளை சிறப்பாக மேற்கொளுங்கள் என கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் (02) கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற குழப்பங்கள் தொடர்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலை தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக வரலாறு காணாத பாரிய அபிவிருத்தியை கண்டு வருகின்ற எமது கிழக்குப் பல்கலைக்கழகம் மேலும் சகல வழிகளிலும் அபிவிருத்தியடைந்து சர்வதேச தரத்திலான ஒரு பல்கலைக்கழகமாக மிளிர உங்கள் அனைவரினதும் ஒத்தாசையையும் ஒத்துழைப்பையும் நாடிநிற்கின்றது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இச் சம்பவம் குறித்து மேலும் விளக்கமளித்துள்ள பீடாதிபதிகள்,

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக கல்வி நடவடிக்கைகள் யாவும் கடந்த மார்ச் 25ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது அறிந்ததே. எவ்வாறாயினும் மாணவர்கள் நலன் கருதி 1ஆம், இறுதிவருட அனைத்து பீட மாணவர்களுக்கும் விரிவுரைகள் மீண்டும் 28.04.2014இல் ஆரம்பிக்கப்பட்டது.

2ஆம், 3ஆம் வருட மாணவர்களுக்கு விடுதி வசதி வழங்குவது தொடர்பில் காணப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக குறித்த மாணவர்களுக்கான விரிவுரைகள் இது வரையில் ஆரம்பிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் அவர்களுக்கான விரிவுரைகள் மே 21ஆம் திகதி ஆரம்பிப்பதென கிழக்குப் பல்கலைக்கழக மூதவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சாதாரண பல்கலைக்கழக நடைமுறைக்;கு மாறுபட்ட முறையில் மாணவர் நலன் கருதி இம் மாணவர்களுக்கு விடுதி வசதி வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதனிடையே கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சில கட்டடத் தொகுதிகள்  ஜனாதிபதியினால் திறந்து வைக்க ஏற்பாடாயிருந்தது. இக் காலப் பகுதியில் மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு வருவது தடைவிதிக்கப்பட்டிருந்தமையால் கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை மாணவர்கள் இந் நிகழ்விற்கு அழைக்கப்படவில்லை. எவ்வாறாயினும் ஜனாதிபதியை வரவேற்கும் நோக்கோடு கலை, கலாசார பீட இன்னிசை அணியினர் பயன்படுத்தப்பட்டனர்.

கி.ப.க இல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் துரித அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக மாணவர்களின் நலன் கருதியே நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்திலே மாணவர்களை புறந்தள்ளுவது என்பது உபவேந்தரதோ விரிவுரையாளர்களினதோ நிருவாகிகளினதோ நோக்கமல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 04.04.2014இல் கௌரவ உயர் கல்வி அமைச்சருடனான சந்திப்பின் போது ஏப்ரல் 21ஆம் திகதி அனைத்து பீட மாணவர்களுக்கும் விரிவுரைகள் ஆரம்பிக்கப்படுமென்ற உறுதி மொழி அளிக்கப்பட்டிருந்தபோதும் நூலகம், வர்த்தக முகாமைத்துவ பீடம், கலை - கலாசார பீடம் என்பன இடமாற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தமையாலும் மற்றும் விடுதி வசதிகளுக்கான நடைமுறைச் சிக்கல்கள் தீர்வுகாணப்படாமல் இருந்த காரணமாகவும் 28ஆம் திகதி 1ஆம் மற்றும் 3ஆம் வருட மாணவர்களின் விரிவுரைகள் மாத்திரமே ஆரம்பிக்கப்பட்டன.

மாணவர்களின் விளையாட்டு விடயங்களில் நிர்வாகம் அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எமக்கு மிகுந்த மன வேதனை அளிக்கின்றது. கடந்த காலங்களில் out of Bounds இல் இருந்த மாணவர்களும் Colours Awarding Ceremony இல் பங்குபற்ற வாகனம் மற்றும் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி நிகழ்வில் அனைவரையும் பங்குபற்ற நிர்வாகம் செய்த செயல் உங்களுக்கு நினைவிருக்கும்.

தற்போது out of Boundsஇல் இருக்கின்ற விளையாட்டுக்களில் பங்கேற்கின்ற மாணவர்கள் தொடர்பாக எமக்கு எவ்விதமான வேண்டுகோள்களும் இந்த நிமிடம் வரை கிடைக்கவில்லை. உரிய முறையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதும் உடனடியாகவே அவர்கள் பயிற்சி பெறுவதற்கும் பங்கேற்பதற்கும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் தயாராக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X