2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வடக்கில் மக்களை கொட்டில்களில் அரசு தங்கவைத்துள்ளது: கோவிந்தம் கருணாகரம்

Suganthini Ratnam   / 2014 மே 06 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

இடம்பெயர்ந்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை மீள்குடியேற்றி விட்டதாகக் கூறும் இந்த அரசு, வடக்கில் மக்களை எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி கொட்டில்களில் தங்கவைத்துள்ளதாக  கிழக்கு மாகாணபை உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த கலாசார விளையாட்டு விழா செட்டிபாளையம் மகா வித்தியாலய மைதானத்தில்  திங்கட்கிழமை (05) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'யாழ். வலி.வடக்கிலுள்ள 24 கிராம அலுவலகர் பிரிவுகளைச்  சேர்ந்த மக்கள் இன்றும் அகதி முகாம்களில் உள்ளனர்.  இது மாத்திரமின்றி, கிழக்கில் சம்பூரில் அகதி முகாம். மட்டக்களப்பில் படையினர் இன்னும் மக்களின் வீடுகளில் முகாம் வைத்திருக்கின்றார்கள். அம்பாறையிலும் அதே மாதிரி முகாம்கள்.   இப்படி வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களது சொந்த இடங்களில் அகதியாக இருக்கும்போது வெளிமாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மையின மக்களுக்கு சகல வசதிகளும்  ஏற்படுத்திக்கொடுத்து இலட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தையும் பகிர்ந்தளித்து எமது இனப்பரம்பலை வட, கிழக்கில் திட்டமிட்டு இந்த அரசு குறைத்துக்கொண்டிருக்கிறது.

இவர்களினுடைய வட, கிழக்கின் அபிவிருத்தி என்பது எமது சொந்த வீட்டில் வேறொருத்தன் வந்து அனுமதி இல்லாமல் குடியிருந்துகொண்டு, எமது வீட்டு வளவிலிருக்கும் அத்தனை வளங்களையும் அனுபவித்துவிட்டு வீட்டுச் சொந்தக்காரனுக்கு ஒரு வேளைக் கஞ்சி ஊத்துவதைப் போலிருக்கின்றது. இன்று தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவிருக்கும் ஒரேயொரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே.  
இவ்வளவு காலமும் 2001 இலிருந்து ஓர் வெறும் கூட்டமைப்பாக இயங்கிய அமைப்பு சம்பந்தன் தலைமையில் ஓர் இணைப்புக்குழுவின் ஊடாக ஐந்து பேர் கொண்ட ஓர் குழுவை அமைத்து அதனூடாக தேர்தல் அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

எமது மக்களின் உரிமைகள் கிடைக்கும்வரை எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேறும் வரையாவது தமிழன் தமிழனாக இருக்கவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நிற்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் தான், சர்வதேசத்தின் உதவியுடனாவது எமது இலக்கை ஓரளவேனும் அடையலாம். அப்போது தான் எமக்காக உயிர்நீத்த இலட்சக்கணக்கானவர்களின் கனவை நிறைவேற்றலாம்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X