2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஏறாவூரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை துரிதம்

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹூஸைன்


ஏறாவூரில் கடந்த ஜனவரியிலிருந்து மே 10 ஆம் திகதியான இன்று வரை 45 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டதையடுத்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம் தாரிக் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் 21 நோயாளிகளும் நேற்றைய தினம் மாத்திரம் 4 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்கள்.
வாளியப்பா தைக்கா பகுதி, றஹுமானியா பாடசாலை வீதி, ஓடாவியார் வீதி, காயர் வீதி, விதானையார் வீதி, காதியார் வீதி, கிராம நீதிமன்ற வீதி, மிச்நகர், மீராகேணி பகுதிகளிலும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய ஆதாரங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனஎன்றும் அவர் சொன்னார்.

நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சி நிரலை ஒட்டியதாக ஏறாவூரில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்றிலிருந்து காலவரையின்றித் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதாரத் திணைக்களம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, ஏறாவூர் நகரசபை, பிரதேச செயலகம், கல்வித் திணைக்களம் உட்பட இப்பொழுது பொலிஸாரும் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதென்று நேற்று (09)சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனையில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு கலந்தாலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பழைய டயர்கள், வாழை மரத்தண்டுகள், நீர்த்தாங்கிகள் என்பனவற்றிலிருந்து டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகியிருக்கக் கூடும் என தாங்கள் கருதுவதாக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம் தாரிக் கூறினார்.

கிணறுகளிலும் நீர்த்தாங்கிகளிலும் நுளம்புகள் உற்பத்தியாகும் வீதம் கூடுதலாக இருப்பதால் அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். அதற்கு ஏதுவாக கிணறுகளில் விடப்படுவதற்கு மீன்குஞ்சுகள் போதாமல் இருக்கின்றன. அதனைப் பெறுவதற்கும் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றன.

ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் அலிஸாஹிர் மௌலானாவும் விஷேட சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும்  ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம். தாரிக் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆகக் கூடுதலாக டெங்கு நோய் பரவும் இடங்களில் ஒன்றாக மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசம் அடையாளப்படுத்தப் பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X