2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

குடும்பத்திலிருந்து அபிவிருத்தி ஆரம்பிக்க வேண்டும்

Suganthini Ratnam   / 2014 மே 11 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

எந்த அபிவிருத்தியும் குடும்பத்திலிருந்தும் வீட்டிலிருந்தும் தொடங்க வேண்டும். பொருளாதார கட்டுமான, மனிதவள அபிவிருத்திகள் குடும்பத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என  ஊக்குவிப்பு உற்பத்தித்திறன் விருத்தி அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

'கிராமம் கிராமமாக வீடு வீடாக நிறைவான இல்லம் வளமான தாயகம்' என்ற தொனிப்பொருளில் மக்களின் காலடிக்குச் செல்லும் ஒருங்கிணைந்த இடம்பெயர் சேவை  ஏறாவூர் அஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் சனிக்கிழமை (10) நடைபெற்றது.  இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'நாடு பூராகவும்; அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மிகத்; துரிதகதியில் மேற்கொள்ளப்படுகின்றன.  நாடு என்ற ரீதியிலும் கிராமம் என்ற ரீதியிலும் அபிவிருத்தித் திட்டங்கள்  மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஐந்தாண்டுகளாக  பல கோடி ரூபாவை செலவு செய்து அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகி;றோம்.

'கிராமம் கிராமமாக வீடு வீடாக நிறைவான இல்லம் வளமான தாயகம்' என்பது ஜனாதிபதியின்  'மஹிந்த சிந்தனை' பிரகடனத்தின் கீழ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படுகின்றது.  மக்களின் காலடிக்கு அபிவிருத்தித் திட்டங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதுவொரு அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும்.

முக்கியமானதொரு  விடயத்தை இந்த இடத்தில் நான்  குறிப்பிட வேண்டும். ஒரு நாடு அபிவிருத்தியடைகின்றபோது, அந்த நாட்டின் வாழ்க்கைச் செலவும் இயல்பாக அதிகரிக்கும். இது பொருளாதார வல்லுநர்களுக்கும் மற்றுமுள்ள எல்லோருக்கும் தெரிந்த விடயம். 

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கண்டுகொள்வதற்கு நாம் ஒவ்வொருவரும் பொருளாதார நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
பாலங்கள், வீதிகள், சுகாதாரம், கல்வி, கைத்தொழில் மீன்பிடி, விவசாயம், சுகாதாரம் என பல துறைகளும் பாரிய அபிவிருத்தி கண்டுவருகின்றன.

இதனால்தான் மக்களின் காலடிக்கு வேலைத்திட்டங்களை கொண்டு செல்வதோடு, மக்களை சுயதொழில் செய்யத் தூண்டுவதும் இடம்பெறுகிறது.
அபிவிருத்தி அதிகரிக்க, அதிகரிக்க வாழ்க்கைச் செலவும் அதிகரிக்கும் என்ற நியதியின் அடிப்படையில், வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கக் கூடியதாக குடும்ப வருமானத்தை நிலைப்படுத்தும் அபிவிருத்திகளை அரசாங்கம்  முன்னெடுத்து வருகிறது.

அந்த அடிப்படையிலேதான் 'கிராமம் கிராமமாக வீடு வீடாக நிறைவான இல்லம் வளமான தாயகம்' எனும் தொனிப்பொருளில் அபிவிருத்தியை அரசாங்கம் மக்களின் காலடிக்கும் வீடு வரையும் கொண்டுசென்றுள்ளது.

ஒரு பக்கம் துரித பரவலான அபிவிருத்தி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில்தான் நாடு முழுவதிலும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புப் பற்றி முணுமுணுக்கப்படுகின்றன.

இதனால்தான் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என எல்லோருமாக இணைந்து ஒட்டுமொத்த அபிவிருத்தியில்; முழுப்பங்களிப்பைச்; செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த அரசியல் சார்பானவராக இருந்தாலும் எந்தப் பிரிவில் பணியாற்றுகின்ற அதிகாரியாக இருந்தாலும் அது பறவாயில்லை. ஆனால், நீங்கள் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிச் சிபார்;சு செய்கின்றபோது, அதன் அடிப்படை ஒரு குடும்ப அபிவிருத்தியாக இருக்க வேண்டும் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

ஏறாவூர் நகரமானது காணித்துண்டொன்றைக் கண்டுபிடிக்க முடியாதளவிற்கு கட்டிடக் காடாகியிருக்கின்ற நகரமாகும். எங்களுடைய எல்லா அபிவிருத்திகளும் வெறும் வீதிகளைப் போடுவது, கட்டிடங்களைக் கட்டுவது என்று ஒரு கொங்கிறீட் காடாக்கும் திட்டமாகத்தான் காட்சியளிக்கின்றது.

ஒட்டுமொத்தத்தில் ஏறாவூர் நகரம் ஒரு சுற்றுப் புறச்சூழல் மாசடைதலை எதிர்நோக்கி வருகின்றது. நீர் அசுத்தமடைகின்றது. வெப்பம் அதிகரிக்கின்றது. மரங்கள்,  செடிகொடிகள் இல்லாமையால் இயற்கைச் சூழல் இல்லாமல் போய் தூய்மையான காற்றைச் சுவாசிக்க முடியாமல் போயுள்ளது.

எமது அபிவிருத்திகளை மேற்கொள்கின்றபோது, சுற்றுப்புறச் சூழலுக்கும் இயற்கைக்கும் நாசம் உண்டுபண்ணாத வகையில் நன்கு திட்டமிட்டு தூய்மையான இயற்கைச் சூழலை எமது எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்க வேண்டும். மாசடைந்து தூர்ந்துபோன ஒரு நகரை எமது எதிர்கால சந்ததிக்குக் கையளிக்கின்ற அறிவீனர்களாக நாம் ஆகிவிடக் கூடாது. அதற்கேற்ற வேலைத்திட்டங்களை நாம் வடிவமைத்து அதனை அமுல்படுத்துவதிலே கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டும்.

ஒரு காலத்திலே கொந்தராத்து வேலைகளில் மட்டும் ஆர்வம் காட்டுகின்ற அதிகாரிகளைக் கொண்ட ஒரு முகாமாக இருந்த ஏறாவூர் நகரப் பிரதேச செயலகம், இப்பொழுது மக்களுக்குரிய வேலைத்திட்டத்தைச் செய்கின்ற ஒரு காரியாலயமாக மாறிக் கொண்டு வருவதை  நான் அவதானிக்கின்றேன். இது ஒரு நல்ல மாற்றத்தின் சிறியதொரு அறிகுறியாகும்.' என்றார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா தலைமையில் நடைபெற்ற  இந்த இடம்பெயர் சேவையில் பிரதேச செயலக அலுவல்கள், பொலிஸ், அஞ்சல் அலுவலகம், சுகதார வைத்திய அதிகாரி அலுவலகம், காணி, விவசாயத் திணைக்கம், ஆயுர்வேத வைத்தியத் தேவைகள், நகரசபை அலுவல்கள்,  விதாதா வளநிலையம், புகைப்பட பிடிப்பு, பொது வசதிகள், பிறப்பு இறப்புப் பதிவு, சமூக சேவைகள் உள்ளிட்ட சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத், கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர், ஏறாவூர் நகர மேயர் அலிஸாஹிர் மௌலானா, உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஷா,  ஏறாவூர் நகரசபை உறுப்பினர்களான எம்.ஐ.வாசித் அலி, அமீன் இஸ்ஸத் ஆஸாத், முஹம்மத் முஸ்தபா உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X