2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சமூகச் சீரழிவுகளிலிருந்து தமிழ் இளைஞர், யுவதிகளை பாதுகாக்க வேண்டும்

Suganthini Ratnam   / 2014 மே 11 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்தில் சமூகச் சீரழிவுகளிலிருந்து தமிழ் இளைஞர், யுவதிகளை பாதுகாப்பதற்காக  இந்து ஆலயங்களும் இந்து சமூக நிறுவனங்களும் செயற்பட வேண்டுமென கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி ஜெனரல் லால் பெரேரா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள இந்து ஆலயங்களின் நிர்வாகிகள்,  இந்துக் குருமார்கள், இந்து சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு வெலிக்கந்தையிலுள்ள கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி அலுவலகத்தில் சனிக்கிழமை (10) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'கிழக்கு மாகாணத்தின் தமிழ்ப் பிரதேசங்களில் சமூகச் சீரழிவுகள் அதிகரித்துள்ளன.  தற்கொலை, சிறுவயதுத் திருமணம்,  சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி பாவனை, பாடசாலையை விட்டு இடை விலகல், ஆலயங்களின் உண்டியல்களை களவாடுதல், ஆலயங்களுக்கு போகாமை, சிறுவர் துஷபிரயோகம், மது பாவனை, போதைவஸ்;துப் பாவனை  போன்ற சமூகச் சீரழிவுகள் அதிகரித்து வருகின்றன.

இவைகளிலிருந்து இளைஞர், யுவதிகளை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு இந்து ஆலயங்கள், இந்துக் குருமார்கள், இந்து சமூக நிறுவனங்களுக்கு உண்டு.

பாடசாலையை விட்டு மாணவர்கள் இடைவிலகுவதற்கு அடிப்படை காரணம் வறுமையாகும். அந்த வறுமையைப் போக்க நாம் பாடுபட வேண்டும்.

ஆன்மிக ரீதியாக இளைஞர், யுவதிகளுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்புண்டு. வெளிநாட்டு சில நிறுவனங்கள் இங்கு இளம் யுவதிகளுக்கு கையடக்கத் தொலைபேசி இயக்குதல், அதில் புகைப்படம் எடுத்தல் போன்ற  பயற்சியை நடத்தியதாக அறிய முடிகின்றது. இது போன்றவைகளில் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

புனர்வாழ்வு பெற்ற தமிழ் இளைஞர், யுவதிகளை புறக்கணி;க்காமல் அவர்களை சமூகத்துடன் இணைத்துச் செயற்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான வசதி வாய்ப்புக்களை செய்து கொடுக்க வேண்டும்.

சில அதிகாரிகள் அவர்களுக்கு உதவும் விடயங்களில் பாரபட்சம் காட்டுவதாக தெரியவருகின்றது. அவ்வாறில்லாமல் அந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரம்,  காணி வழங்குதல், அடையாள அட்டை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

மேலும், மீள்குடியேறிய தமிழ்க் குடும்பங்களின் நலன்களில் அக்கறையுடன் செயலாற்ற வேண்டும்.

இங்குள்ள தமிழ் மக்களுக்கு உதவப் போவதாக தெரிவித்து வெளிநாடுகளில் நிதி திரட்டப்படுகின்றன. ஆனால், அந்த நிதி எதுவும் இந்த தமிழ் மக்களுக்காக செலவழிக்கப்படவில்லை.

நாம் காக்கிச்சட்டை அணிந்திருப்பது இந்தத் தேசத்தின் பாதுகாப்புக்காகவே அன்றி, யாரையும் அச்சுறுத்துவதற்காக அல்ல என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

தேசத்திற்கு அச்சுறுத்தல் வருகின்றபோது, எமது கடமையைச் செய்வோம். அதற்காகவே நாம் இந்தக் காக்கிச்சட்டையை அணிந்துள்ளோம். சில தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு இராணுவத்தினர் வேலைவாய்ப்பு வழங்க முயற்சிக்கும்போது அதை தடுப்பதுடன், எங்களை விமர்சிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் யாராயினும் அவர்களுக்கு உதவி வருகின்றோம். ஏனைய சமூகங்களைப் போல தமிழ்ச் சமூகமும் வாழ வேண்டும்.

தமது சமூக கலாசார  விழுமியங்களை பாதுகாத்து ஆலயங்கள் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதுடன், சமூகச் சீரழிவுகளிலிருந்து வருங்கால சந்ததியைப் பாதுகாக்க பொறுப்புடன் செயற்பட வேண்டும்' என்றார்.

இந்தச் சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தில் சில பிரதேசங்களில் மொழி தெரியாததால் தமிழர்கள் பாதுகாப்பு தரப்பினரால் தாக்கப்படுவது, யானைகளின் அச்சுறுத்தல், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X