2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'சமாதான சூழலில் நாம் எவ்வாறு வாழ்கிறோம் என்பதை சிந்திக்கவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 04 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

'இப்போது சமாதானம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றார்கள். இந்த சமாதான சூழலில் நாம் எவ்வாறு வாழ்கின்றோம் என்பது தொடர்பில் சற்று சிந்திக்கவேண்டும்' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்குடாத்தொகுதி கூட்டம், வாழைச்சேனை வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் சனிக்கிழமை  (03) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய  அவர்,  

'நாங்கள் 65 வருடங்களாக எமது விடுதலைக்காக அஹிம்சை, ஆயுத ரீதியில் போராடியவர்கள். ஆனால், எமக்கு விடுதலை கிடைக்கவில்லை. அந்த விடுதலைக்கான வேலைத்திட்டம் போராட்டம் என்பது சர்வதேசத்தினுடாக மாற்றுவழி வேலைத்திட்டத்தினூடாக எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதனூடாக இந்த ஜனாதிபதித் தேர்தலை நாம் சந்திக்கின்றோம். இந்தத் தேர்தலில்  19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். ஆனால், இதில் இருவருக்கு மட்டுமே வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படுகின்றது.   

இப்போது சமாதானம் ஏற்பட்டுள்ளதாக  கூறுகின்றார்கள். இந்த சமாதான சூழலில் நாம் எவ்வாறு வாழ்கின்றோம் என்பதை சற்று சிந்திக்கவேண்டும். நாம் சுதந்திரமாக வாழ்கின்றோமா?,  சுதந்திரமாக கூட்டத்தை கூட்டுகின்றோமா?, சுதந்திரமாக பாடசாலைக்கு எமது பிள்ளைகளை அழைத்துச் செல்லுகின்றோமா?, சுதந்திரமாக தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு நிகழ்வை நடத்தமுடிகின்றதா?, நாம் நடத்துகின்ற கூட்டங்களில் மக்களை விட, புலனாய்வாளர்கள் எம் பின்னால் தொடர்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

மேலும், ஏறக்குறைய 12,000 முன்னாள் போராளிகளை விடுதலை செய்ததாக இந்த அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால், இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் வீடுகளில்; சுதந்திரமாக உறங்கமுடிகின்றதா? இல்லை. அவர்களை இன்னும் பின்தொடர்ந்துகொண்டே இருக்கின்றார்கள்.

போரை முடித்து வெற்றி விழா கொண்டாடிய இந்த அரசாங்கம்,  இன்றும் 500 சிறைக்கைதிகளை வைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கைதிகளை விடுதலைப் போராட்டத்தில் இணைத்தவர்கள் வெளியில் இருக்கின்றார்கள்.  ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்ற இந்த வேளையில், 500 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள் என்று அரசாங்கத்துடன் இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  பிரதியமைச்சர்  விநாயகமூர்த்தி முரளிதரன்,  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் போன்றவர்கள் இந்த ஜனாதிபதியிடம் கூறுவதற்கு முதுகெலும்பு இல்லை.

இவர்கள் சமாதானம் வந்திருக்கின்றது. வீதிகளை செய்துதந்திருக்கின்றார்கள். பாலங்களை அமைத்துத் தந்திருக்கின்றார்கள். அவருக்கு நாம் நன்றிக்கடன் செலுத்தவேண்டும் என்றே தெரிவிக்கின்றார்கள். எமது தமிழ் மக்கள் நன்றிக்கடன் செலுத்துவதை மறுப்பவர்கள் அல்ல. ஆனால், வாக்குரிமைக்கும் நன்றிக்கடனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. வாக்குரிமை என்பது ஓர் இனத்தின் விடுதலைக்காக, ஓர் அரசியல் பயணத்துக்காக,  அடுத்த இலக்கை அடைவதற்காக, சர்வதேச ரீதியாக எமது பலத்தை காட்டுவதற்காக நாம் இடுகின்ற புள்ளடியை நன்றிக்கடன் என்ற பேரில் இவர்கள் கேட்கின்றார்கள் என்றால் அதை விட வெட்கக்கேடு இல்லை' என்றார்.  

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X