2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'மைத்திரி ஆட்சிக்கு வந்தால் போராட்டம் ஆரம்பிக்க மேற்குலக நாடுகள் உதவவுள்ளன'

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 04 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தால், மீண்டும் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு மேற்குலக நாடுகள் உதவிசெய்யப் போகின்றன. அப்பொழுது மேற்குலக  நாடுகளின் ஆயுத விற்பனை அமோகமாக நடக்கும் என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்; எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழ் இளைஞர், யுவதிகள் செத்து மடிவார்கள் எனவும் அவர் கூறினார்.

இரண்டாயிரம்  மாணவர்களுக்கு  புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு, ஏறாவூர் றஹுமானியா வித்தியாலயத்தில் சனிக்கிழமை (03) இரவு  நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'யுத்தம் இடம்பெற்ற கடந்த 30 வருடகாலமும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்கள், திறந்தவெளி அகதி முகாம்கள் போல  இருந்தன.

வீடுகளினுள் வாழமுடியாது, வியாபாரம் செய்யமுடியாது, விவசாயம் செய்யமுடியாது, கால்நடைகளை வளர்க்கமுடியாது, கூலித்தொழிலுக்கு போகமுடியாது, பிள்ளைகள் கல்வி கற்கமுடியாது,  நோயாளிகளுக்கு கூட சிகிச்சை அளிக்க முடியாமல் நாம் பட்ட துன்பங்களை நினைத்துப்பாருங்கள். இப்படிப்பட்ட அச்சம் ஊட்டும் சூழ்நிலை இப்பொழுது இல்லை. இதனை ஏற்படுத்தித்தந்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன்  சேர்ந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், போராட்டம் அடக்கி ஒடுக்கப்பட்டதாக இப்பொழுது தமிழ்ப் பிரதேசங்களில் பிரசாரம் செய்கின்றனர். போராட்டத்தை  மீண்டும் உயிர்ப்பூட்டி வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று அவர்கள் கங்கணம் கட்டி நிற்கின்றனர். அதற்கு பொதுவேட்பாளர்  மைத்திரிபால சிறிசேன  உதவுவார் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.  

கஷ்டப்பட்டு பெற்ற சமாதானத்தை நாம் இழக்கமுடியாது. அதற்காக ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கவேண்டும்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மக்களை கட்டியெழுப்புவதே ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ அரசின் திட்டம். அடுத்த ஐந்து ஆண்டுகள் நாட்டில் ஐந்து இலட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். அபிவிருத்தியும் சமாதானமும் இணைந்து பயணிக்கவேண்டும். சமாதானம் தொடர்ந்திருக்க வேண்டுமாயின், ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியில் நாங்களும் பங்காளர்களாக மாறவேண்டும்' என்றார்.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X