2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மைத்திரியின் வெற்றி தமிழ் பேசும் மக்களின் வெற்றி: பொன். செல்வராசா

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 09 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பெற்ற வெற்றி, தமிழ் பேசும் மக்களின் வெற்றி என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடங்களுக்கு வெள்ளிக்கிழமை (09)  கருத்துத் தெரிவித்த அவர்,

'2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பெற்ற வெற்றி, தமிழ் பேசும் மக்களின் வெற்றியாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிங்கள மக்கள் அதிகளவில் வாக்களித்துள்ளதை பார்க்கக்கூடியதாக உள்ளது.  இதன் மூலம் பெரும்பான்மையின மக்கள் இன்னமும் யுத்த வெற்றியை மறக்கவில்லை என்பது புலனாகின்றது. இதேவேளை, பெரும்பான்மையின  மக்களில் சிலர்  அதை மறந்துவிட்டார்கள் என்பதும் புலனாகின்றது.

தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிகளவான வாக்குகள் கிடைத்துள்ளதை   காணமுடிகின்றது. தென்பகுதியிலும் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற பகுதிகளிலும் மைத்திரிபால சிறிசேன அதிகளவான  வாக்குகள்  பெற்றுள்ளதை காணமுடிகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்கள் நீங்கவேண்டும் என்பதற்காக அவர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள். இதன் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தமது வாக்குகளை பயன்படுத்தியிருக்கின்றார்கள்.

தமிழ் மக்களின் வாக்குப்பலத்தினாலேயே, மைத்திரிபால சிறிசேன  ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்; என்பதே உண்மை. இலங்கை வாழ் மக்கள் எல்லோரும் அதை ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.

மேலும், மைத்திரிபால சிறிசேனவின்  மீதுள்ள  நம்பிக்கை காரணமாக எந்தவித நிபந்தனைகளையும் முன்வைக்காமல், அவருக்கு ஆதரவளித்துள்ளோம். இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.  

மைத்திரிபால சிறிசேன எங்களுடைய பிரச்சினைக்கு  தீர்வை தருவார் என்ற நம்பிக்கை எங்களுக்குண்டு. அவர் சமாதான சூழலை ஏற்படுத்தி முரண்பாடுகள் அற்ற சமூகத்தை இலங்கையில் உருவாக்கவேண்டும்'எனக் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X