2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'மாறிமாறி வந்த அரசாங்கங்கள் எங்களை பகடைக்காய்களாக நினைத்தன'

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 16 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்


இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமையால், மாறிமாறி வந்த அரசாங்கங்கள் ஏமாற்றி எங்களை பகடைக்காய்களாக நினைத்ததே தவிர,  இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும்  அவர்கள் எடுக்கவில்லை  என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட அதிபர் கட்டடத்தை இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'நாங்கள் எதிர்க்கட்சி; நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தோம்.  அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களை விட, கூடுதலான சேவைகளை நாம் செய்துள்ளோம் என்பதையிட்டு பெருமிதம் அடைகிறோம். எதிர்க்கட்சி வரிசையில் நாம் இருந்தாலும், பொதுமக்களின் தேவைகளை கணிசமானளவு செய்துள்ளோம். எமது தமிழ் இனத்துக்கு தேவையான பல முக்கிய காரியங்களை  எதிர்க்கட்சி வரிசையிலிருந்து செய்துள்ளோம். அதாவது, 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற நிர்வாகப்பரீட்சையில் தமிழ் பேசும் இளைஞர்கள் எவரும் எடுபடவில்லை. இது தொடர்பில் உரிய அமைச்சரின் கவனத்துக்கு நாம் கொண்டுவந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீண்டும் அதை விசேட பரீட்சையாக நடத்தி அதன் மூலம் 40இற்கும் மேற்பட்ட நிர்வாக உத்தியோகஸ்தர்களை நியமிப்பதற்கு எம்மாலான முயற்சிகளை மேற்கொண்டோம்.  இதை  ஏன் நான் கூறுகின்றேன் என்றால், வளர்ந்துவருகின்ற சமூகம் நாளை தலைவர்களாகக்கூடிய  நிலைமை இங்குள்ளது.  இந்த மாணவர் சமூகம் இவற்றை அறிந்துகொள்ளவேண்டும். இதேபோன்று கணக்காளர் பரீட்சையிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

இந்த விடயங்களை  எமது பகுதியிலுள்ள அரசாங்கத்தைச் சார்ந்த அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ கவனத்தில் எடுப்பதில்லை. அவர்களின் வேலைகள் வேறு விதத்திலிருக்கும்.

தமிழ் இனம் வேண்டிநிற்கின்றவை எவையெவை என்று அறிந்துள்ளவர்கள் நாங்களே என்ற காரணத்தால், எமது வேலைகள்  தமிழர் உரிமைகள் சார்ந்ததாக இருந்தாலும் கூட, இவ்வாறான சேவைகளை  மேற்கொள்கின்றோம்.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னும் பின்னும் அரச வேலைகளில் 65 சதவீதத்துக்கும்  மேலாக அங்கம் வகித்தவர்கள்  தமிழர்கள்.  இலங்கையின் முதல் நிர்வாக அதிகாரியாக இருந்தவர்; ஒரு தமிழரே. அவர் பொன்னம்பலம் அருணாச்சலம் ஆவார். இலங்கையின் முதலாவது தேசியத் தலைவர் இலங்கையில் வாழும் தமிழ், சிங்களம், இஸ்லாமிய அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசியத் தலைவர் சேர் பொன் இராமநாதன் ஆவார்.

இந்தளவுக்கு அரசியலில் கொடி கட்டிப்பறந்த எமது இனம்,  கடந்தகால வரலாற்றில் தேய்ந்துபோனது யாவரும் அறிந்ததே. இதற்கு காரணம் புரையோடிப்போன  இனப்பிரச்சினை என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமையால், மாறிமாறி வந்த அரசாங்கங்கள், ஏமாற்றி எங்களை  பகடைக்காய்களாக நினைத்தார்களே தவிர, இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. இதனால்,  ஆயுதப்போராட்டம் ஆரம்பித்து  கடந்த 30 வருடகால வரலாற்றில் எமது மக்கள் மிகவும் இன்னல்களை அனுபவித்தனர்.

இன்று ஓரளவு நியாயமான, சுமுகமான சூழலில் நாம் இருந்தாலும்;, கடந்தகாலத்திலிருந்து இற்றைக்கு இரு வாரங்களுக்கு முன்னர்வரையும் 2009ஆம் ஆண்டு போர் மௌனித்ததன் பின்னரும் நாம் வேறொரு பயங்கரவாதத்தால் ஆட்கொள்ளப்பட்டோம். அது அரசாங்க பயங்கரவாதம். இந்த அரசாங்க பயங்கரவாதத்தால் தாக்கப்பட்ட நாம், 2015.01.09ஆம் அன்றிலிருந்து ஓரளவு மீட்சி பெற்றுள்ளோம். இந்த மீட்சிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. இந்த ஒத்துழைப்பு வீணாகவில்லை.  நல்ல தலைவரை நாம் தெரிவுசெய்துள்ளோம். அவரே  புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அவரின் 100 நாள் வேலைத்திட்டம் நிகழ்ச்சிநிரலின் பிரகாரம்  நடைபெறுகின்றது.  

இன்று நாங்கள் உண்மையில் சந்தோஷமாக உள்ளோம். தமிழர்களின் புரையோடிப்போன பிரச்சினைகளை புதிய ஜனாதிபதியிடம்  தெரிவித்துள்ளோம்.  அத்தனைக்கும் அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.  இது எவ்வாறு செல்லப்போகின்றது என்பதை நாம் பொறுத்திருந்து  பார்க்கவேண்டும்.   இதற்காக எமக்கு தந்த அமைச்சுப்பதவியை கூட நாம் ஏற்கவில்லை. எமது இலக்கு அமைச்சுப்பதவியை ஏற்பதல்ல. அரசாங்கத்துடன் ஒத்துழைப்போம். எமது இலக்கு வேறொன்றை நோக்கியது.  தமிழர்களின் புரையோடிப்போன பிரச்சினை தீர்க்கப்படவேண்டியதாக உள்ளது.

அன்றைய அரசாங்கத்தால் எமது தமிழ் பகுதிகள் இராணுவமயமாக்கப்பட்டன. எமது காணிகள் சுவீகரிக்கப்பட்டன. வடக்கு, கிழக்கில் மட்டும் 6,000 ஏக்கருக்கும் அதிகமாக சொந்தக்காணிகள் பறிக்கப்பட்டன, கிழக்கில் காணிகள் இருக்கும் இடங்களில்; சிங்களக் குடியேற்றங்கள்.

இதனை யார் தட்டிக்கேட்டார்கள். தட்டிக்கேட்க யாரும் வரவில்லை. தப்புகள் நடக்கும்போது தட்டிக்கேட்க வேண்டியவர்கள் பேசாமல் இருந்தார்கள். ஆனால், அந்தப் பிரச்சினையை தட்டிக்கேட்டு நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்து நீதிமன்றம்வரை சென்றது மட்டுமல்லாது, சர்வதேசம்வரை கொண்டுசென்றவர்கள் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பினரே தவிர, வேறு எந்தக்கட்சியும் இல்லை.
தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு  தமிழர்களின்; நல்வாழ்வுக்காக சோதனை, வேதனைகளை தாங்குகின்ற  கட்சியாக இருக்கின்றது. எமது இலக்குகள் தீரும்வரை நாம் அமைச்சுப்பதவிகளை எடுப்பதற்கு தயாராக இல்லை. அமைச்சுப்பதவிகளை நாம் எடுத்தால், எமது சமூகத்துக்கு  ஏதேனும் செய்யலாமென்று சிலர் தெரிவிக்கின்றார்கள். ஆனால், அமைச்சுப்பதவிகளை நாங்கள் பெற்றுக்கொண்டால், எமது வாய்கள் அடைக்கப்படும்.  

தற்போதுள்ள அரசாங்கம் கூட, ஒரு தவறை செய்தாலோ அல்லது ஏதும்  கூறினாலோ அதை தட்டிக்கேட்க முடியாத சூழ்நிலை எமக்கு ஏற்படும். அக்காரணத்தாலும்  அமைச்சுப்பதவிகளை நாம் ஏற்கவில்லை. ஆனால், அரசாங்கத்துடன்  இணைந்து நாம் செயற்படுகின்றோம்' என்றார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X