2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நால்வரை கட்சியில் இணைத்துக் கொள்ளக்கூடாதென தீர்மானம்

Thipaan   / 2015 ஜனவரி 17 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கருணா அம்மான், பிள்ளையான், மோகன், அலிசாஹீர் மௌலானா ஆகிய நால்வரையும் ஐக்கிய தேசியக் கட்சியில் உள்வாங்கக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்;ட மத்திய குழு இன்று சனிக்கிழமை (17)   ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்;ட மத்திய குழுக் கூட்டம் மட்டக்களப்பு அருள் ஒளி மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற போதே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான அரசரட்னம் சசிதரன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் கல்கடா தொகுதி அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.மாசிலாமணி, பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் எஸ்.சத்தியசீலன் உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் பிராந்திய முகாமையாளர்கள், பிரதேச அமைப்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது கருணா அம்மான் என அழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயக மூர்த்தி முரளிதரன், பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், மற்றும் ஏறாவூர் நகர சபை தலைவர் அலிசாஹீர் மௌலானா மற்றும் செங்கலடி மோகன் ஆகிய நான்கு பேரையும் ஐக்கிய தேசியக் கட்சியில் எக்காரணம் கொண்டும் உள்வாங்க கூடாது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் எதிர்வரும் எந்த தேர்தலாயினும் கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டுச் சேர்ந்து போட்டியிடக் கூடாது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க வேண்டுமெனவும்  இந்த பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்க கூடாது எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் எடுக்கும் தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதெனவும் இதன் போது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இதன் போது இந்த தீர்மானங்களுக்கு ஆதரவாக மத்திய குழு உறுப்பினர்கள் தமது கைகளை உயர்த்தி தீர்மானத்தை நிறைவேற்றினர்.
கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மீதும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மீதும் நடாத்திய அடாவடித்தனங்கள், அட்டகாசங்கள் அநியாயங்கள், பழிவாங்கள்கள் என்பவற்றையும் இதில் கலந்து கொண்டோர் விபரித்தனர்.

இந்த தீர்மானங்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவுக்கு அறிவிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான அரசரட்னம் சசிதரன் தெரிவித்தார்.
 



 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X