2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'கடந்த ஆட்சியாளர்கள் நாட்டு மக்களை முட்டாளாக்கியிருந்தார்கள்'

Gavitha   / 2015 ஜனவரி 18 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


கடந்த ஆட்சியாளர்கள் முழு நாட்டு மக்களையும் முட்டாள்களாக்கியிருந்தார்கள். நாட்டில் சட்டமும் நீதியும் சீர்குலைந்திருந்த வேளையிலேயே மக்கள் மாற்றம் வேண்டி வாக்களித்தார்கள் என்று சர்வோதய இயக்கத் தலைவர் கலாநிதி ஏ.ரி. ஆரியரத்ன தெரிவித்தார்.

சர்வோதய இயக்கத்தின் தேசோதய மாகாண மட்ட அரசியல் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் முதல் கட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான் மாவட்ட பயிற்சி நிலையத்தில்  ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வோத இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல். அப்துல் கரீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'இறைமை, ஜனநாயக உரிமைகள், மதம், இனம், மொழி என்பன கடந்த ஆட்சியாளர்களால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

எந்தவொரு விடயத்துக்கும் அரசியலைக் காவிக் கொண்டு அரசியல்வாதிகளின் சிபார்சுகளைக் காவிக் கொண்டு செல்ல வேண்டியயிருந்தது.

பாடசாலைக்கு ஒரு பிள்ளையைச் சேர்ப்பதாயின், அரசியல்வாதிகளின் சிபாரசு இல்லாமல் நாம் தனித்துவத்துவத்துடன் சென்று அலுவல்களை முடிக்கும் கலாசாரம் உருவாக்கப்படவேண்டும். ஒவ்வொரு அலுவலகத்திலும் நாட்டின் சாதாரண ஒரு குடிமகனுக்கும் கௌரவமளித்து அவனது தேவை பூர்த்தி செய்யப்படவேண்டும்.

சட்டமும் நீதியும் எங்களைப் பாதுகாப்பது போல அதற்கு நாமும் கௌரவமளிக்க வேண்டும். சட்டத்தையும் நீதியையும் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கல் வேண்டும்.

இந்நாட்டில் மக்களைக் கொல்பவர்களுக்கும் சட்டத்தையும் நீதியையும் சீர்குலைத்தவர்களுக்கும் அமைச்சுப் பதவி கொடுப்பதாக இருந்தால், அது ஒரு அராஜகம் ஆட்சி செய்வதைத்தான் வெளிப்படுத்தும்.

இலங்கையின் சரித்திரத்தில், வடக்கு கிழக்கு தெற்கு மக்கள், எதுவித வேறுபாடுகளுமின்றி வாழ வேண்டும் என்பதற்காகவும் சட்டமும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டுதான் வாக்களித்தார்கள். தவிர மஹிந்தவுக்கு எதிராகவோ அல்லது மைத்திரிக்கு ஆதரவாகவோ மக்கள் வாக்களிக்வில்லை.

கடந்த 60 வருடகாலமாக சர்வோதய இயக்கம் இன ஐக்கியத்துக்கும் நல்லாட்சிக்குமாகவே பாடுபட்டுக் கொண்டிருக்கின்றது. நாமெல்லோரும் இலங்கையர்கள் என்ற அடிப்டையில் அவரவர் விரும்பிய மதத்தை, தமது கலாசாரத்தை, அவர்களுக்கு விரும்பிய உணவை, அவர்கள் விரும்பிய மொழியைப் பேசிக் கொண்டு வாழலாம்.

இதில் யாரும் முரண்பட்டுக் கொள்ள வேண்டியதில்லை. சர்வோதய இயக்கம் மக்களாட்சி, நல்லாட்சிக்காகப் பாடுபடுகின்றது. சண்டியர்களின் ஆட்சி இலங்கை மக்களுக்கு ஒருபோதும் தேவைப்படாது. பல்லின, பல் கலாசார பண்பாட்டு விழுமியங்களோடு வாழ்கின்ற நமக்கு, சண்டித்தன அரசியலும் தெருச்சண்டியர்களின் கடும்போக்கு மதவாதமும் சரிப்பட்டு வராது.

நாட்டில் நல்லாட்சியைக் கொண்டு வருவதற்காக தேசோதய இயக்கம் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படும். கறைபடியாத  அரசியல் வாதிகளை உருவாக்கி, நாட்டில் நல்லாட்சியைக் கொண்டு வருவதற்காக, தேசோதய இயக்கத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்று கரிசனை உள்ளது.

தற்போதைய ஆட்சியிலும் நாட்டு மக்கள் நல்லாட்சியை அனுபவிக்கவில்லையாயின், தேசோதயம் எனும் எதிர்கால அரசியல் கட்சி மக்களுக்கு சிறப்பான நல்லாட்சியைக் கொண்டு வருவதற்காக களத்தில் இறங்கும் என்று தெரிவித்தார்.



 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X