2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அபிலாஷையை அடையவேண்டியே நாங்கள் அமைச்சுப்பதவிகளை பெறவில்லை : அரியநேத்திரன்

Sudharshini   / 2015 ஜனவரி 20 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

65 வருடமாக நாங்கள் போராடிக்கொண்டுள்ள சுதந்திரத்தினை பெறவேண்டும். அந்த அபிலாஷையை அடையவேண்டும் என்பதற்காக நாங்கள் அமைச்சுப்பதவிகளை பெறவில்லை. இப்போதும் நாங்கள் பெறமாட்டோம். இனியும் பெறும் எண்ணமும் எமக்கு இல்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பெரியபோரதீவு முத்துவிநாயகர் ஆலயத்தின் குடமுழுக்கு கும்பாபிஷேகத்தினை சிறப்பிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள முத்துவிநாயகர் வித்தகம் நூல் வெளியீட்டு நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

அனைத்து மதங்கள் தொடர்பான அறிவையும் கொண்டுள்ள ஒரு மதகுருவாக நான் விஸ்வப்பிரம்ம ஸ்ரீ காந்தன் குருக்கள் அவர்களை கருதுகிறேன். மற்றைய மதம் தொடர்பாக அவர் போன்ற அறிவினைக் கொண்டவர்கள் வேறு யாரும் இங்கு இருப்பார்கள் என்று நான் கருதவில்லை. இது மட்டக்களப்பு மாவட்டத்துக்கு உயர்ந்த பெருமையினை தந்துள்ளது.

ஒரு இனம் வாழ வேண்டுமாகவிருந்தால் அதன் நிலம் விடுதலை பெற்றதாக இருக்க வேண்டும். நாங்கள் தமிழர்களாக இருப்போமானால் நாங்கள் வாழும்; நிலம், வாழும் சூழலை மதிக்க வேண்டும். அதனை நாம் மதிக்கும் போதே, மற்ற இனங்களுடன் நாங்கள் சமத்துவமாக வாழமுடியும். அந்த வழிமுறையில் தான் காந்தன் குருக்கள் பலவற்றினை தொட்டுச் சென்றுள்ளார்.

தமிழ்த் தேசிய்பகூட்டமைப pனை ஆரம்பிப்பதில் உங்கள் சமூகத்தினை சேர்ந்தவரும் பங்காற்றியுள்ளார் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். இன்று புலம்பெயர்ந்துள்ள போதிலும் இன்னும் தமிழ்த் தேசியத்தில் பற்றுடன் அவர் இருந்து வருகின்றார்.

அகிம்ஷை போராட்டம், ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்ததன் பின்னர், ஐந்து வருடங்கள் போரற்ற சூழ்நிலையில் நாங்கள் வாழ்ந்துள்ளோம். அதனை பலர் சமாதானம் என்று கூறியதை நீங்கள் அறிவீர்கள். போர் முடிந்தாலும் கூட சமாதானம் அற்ற நிலையிலேயே நாங்கள் இருந்து வந்துள்ளோம்.

நிலையான சமாதானம் வேண்டும். நிலைத்து நிற்கும் அரசியல் தீர்வுத் திட்டம் வேண்டும். நாங்கள் பலரை இழந்து, பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டோம் என்பதற்காகத்தான், மாற்றத்தினை வேண்டி பகிரங்கமாக தமிழ்த்; தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்தது. அந்த மாற்றம் இன்று வந்துள்ளது.

யார் ஆட்சிக்கு வருவார் என்பது அல்ல எங்கள் பிரச்சினை. அராஜக ஆட்சியை வடகிழக்கிலிருந்து ஒழிக்க வேண்டும் என்ற செய்தியை நாங்கள் வழங்கியிருந்தோம். அந்த ஆட்சி மாற்றம் வடக்கு கிழக்கு மக்களின் அதிகப்படியான வாக்குகள் மூலம் வந்துள்ளது.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது 100 நாள் திட்டத்தில்; பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அதில் தமிழ்த்; தேசிய கூட்டமைப்புக்கும் அமைச்சு பதவியினை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்போது மட்டக்களப்பிலுள்ள பல்வேறுபட்ட புத்திஜீவகள், சமூகப்பெரியார்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.

நூறுநாள் காலத்தில் வழங்கப்படும் அமைச்சுப் பதவிகளைக் கொண்டு எந்த பணியையும் செய்ய முடியாது. அமைச்சுப்பதவி வேண்டுமானால், கடந்த அரசாங்கதிலேயே பல அமைச்சுப்பதவிகளை பெற்றிருப்போம். நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல. அது அல்ல எங்கள் பிரச்சினை.

மக்களாகிய நாம் ஒரு விடயத்தில் விழிப்பாக இருக்கவேண்டும். எமது இனம் தொடர்ச்சியாக எமது பண்பாடுகள்,பாரம்பரியங்களுடன் வாழவேண்டுமானால், எமது சந்ததியை பெருக்கி ஒரு விடுதலைபெற்ற சமூகமாக வாழவேண்டுமானால் எதிர்காலத்தில் ஆக்கிரமிப்பு இல்லாத பூமியில் நாங்கள் வாழவேண்டுமானால், நிரந்தரமான அரசியல் எமக்கு இருக்கவேண்டும். அந்த நிரந்தரமான அரசியலை செய்யக்கூடிய சக்தி யார் என்பதை மக்கள் இனம் காணவேண்டும். அந்த இலக்கினைக் கொண்ட ஒரேயொரு கட்சியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மட்டுமே உள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நாங்கள் ஜனாநாயக ரீதியாக பலப்படுத்தினால் மட்டுமே எமது இனத்தினையும் எமது பண்பாடுகளையும் எமது நிலத்தினையும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

ஆன்மீக பலத்தினால் அரசியல் பலத்தினை வீழ்த்த முடியும். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதுதான் இந்த நாட்டில் நடைபெற்றுள்ளது. இந்த ஆன்மீக பலத்தினை தொடர்ந்து தக்கவைக்கவேண்டுமாகவிருந்தால் அதனை தக்கவைப்பதற்கான அரசியல் பலம் எங்களுக்கு தேவையாக இருக்கின்றது.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இடம்பெறும் தேர்தலுக்கு பின்னரே, அனைத்து விடயங்களும் நடைபெறவிருக்கின்றது. நாங்கள் எமது இனம், மக்கள் சார்ந்த கட்சியினை பலப்படுத்தவேண்டும். இனம் சார்ந்த விடயங்களை நாங்கள் அரசியலில் பலப்படுத்தும் போதே மொழிசார்ந்த, ஆன்மீகம் சார்ந்த வளங்களை மேம்படுத்தமுடியும் என அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X