Suganthini Ratnam / 2015 ஜனவரி 23 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத்தொகுதியில் உள்ளடங்கும் ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் சூழவுள்ள இதர பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் முக்கிய கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபையின் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தலைமையில் அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கல்குடாத்தொகுதி சூராசபைத் தலைவர் அஷ்ஷெய்க் ஹாமிது சதகா தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டனர்.
சுத்தமான குடிநீர் இன்மையால் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அமைச்சரிடம் இவர்கள் முன்வைத்தனர். இந்த நிலையில், அமைச்சர் ஹக்கீம் இந்தக் குறைப்பாட்டை நிவர்த்திக்கும் விதத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்களையும் நெருக்கடிகளையும் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், குடிநீர் பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் முதலாம் திகதி மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாய, சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை வரவழைத்து ஆராயும் விசேட கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பணிப்புரை விடுத்தார்.
கல்குடாத்தொகுதியின் வாழைச்சேனை, ஓட்டமாவடி உள்ளிட்ட அயல் பிரதேச குடிநீர்த்திட்டம் சம்பந்தமாக முன்னர் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள பத்திரம், செலவுத்தொகை அதிகரிப்பு போன்ற காரணங்களுக்காக மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
வாகனேரி குளத்திலிருந்து நீரை பெற்று விநியோகிப்பதற்கு 4 பில்லியன் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதாயின் குளத்தின் உயரத்தை அதிகரிக்க நேருவதோடு, நீர் பெருக்கெடுத்து ஓடும் பட்சத்தில் புகையிரதப்பாதையின் ஒருபகுதி நீரில் மூழ்கும் நிலைமையும் ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வாறிருக்க, றூகம் நீர்பாசனக்குளத்திலிருந்து வாழைச்சேனை ஓட்டமாவடி உட்பட சூழவுள்ள பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான மற்றுமொரு செயற்றிட்டத்துக்கு பெருந்தொகைப்பணமான 22 பில்லியன் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இன்னுமொரு மாற்று வழியாக, மாதுறுஓயா நீர்த்தேக்கத்திலிருந்து குடிநீரை பெறும் சாத்தியக்கூறும் உள்ளது.
ஆனால், வயல் நிலங்களில் குறிப்பிட்ட சில காலப்பகுதிகளில் பயிர்ச்செய்கை பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் மாதுறுஓயா நீர்த்தேக்கத்திலிருந்து நீரை விநியோகிப்பது தடைப்படும். அந்தக் காலப்பகுதிகளில் இருபோகப் பயிர்ச்செய்கைகளின்போதும் குறிப்பிடத்தக்க காலப்பகுதியில் இந்த நிலைமை ஏற்படும் என கூறப்படுகின்றது.
அந்தக் காலப்பகுதியில் சூழவுள்ள சிறுகுளங்களிலிருந்து நீரை பெற்று சுத்திகரித்து குடிநீர் விநியோகம் செய்யும் சாத்தியம் பற்றியும் இதன்போது ஆராயப்பட்டது.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago