Gavitha / 2015 ஜனவரி 24 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
பல ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு காரணமாக இருந்தவர்கள் இன்னும் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடிவரும் நிலையில், புலம் பெயர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் எவ்வாறு நாடு திரும்புவது? என்று சுவிட்ஸர்லாந்தை தளமாகக் கொண்டியங்கும் சிவராம் ஞாபகார்த்த மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
புதிய அரசாங்கம், புலம்பெயர் ஊடகவியலாளர்களை இலங்கைக்கு திரும்புமாறு விடுத்துள்ள கோரிக்கைக்குப் பதிலழிக்கும் வகையில், சிவராம் ஞாபகார்த்த மன்றத்தின் இணைப்பாளர் சண் தவராஜா வெள்ளிக்கிழமை (23) விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலையடுத்து இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. சகல இன மக்களும் அனுபவித்து வந்த கொடுமைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, ஊழல்ற்ற புதிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வேளையில், நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசாங்க அதிருப்தியாளர்கள் ஆகியோரை, மீண்டும் நாட்டுக்குத் திரும்புமாறு புதிய அரசாங்கத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஒரு சில சிங்கள ஊடகவியலாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக அறிகிறோம். இன்னும் சிலர் எதிர்வரும் நாட்களில் நாடு திரும்பவுள்ளதாக அறிகின்றோம்.
சிங்கள ஊடகவியலாளர்களை பொறுத்தவரை, அவர்கள் முன்னைய அரசாங்கங்களதும் அரச படைகளதும் அதிருப்திக்கு மாத்திரமே ஆளாகி இருந்தனர். ஆனால், தமிழ் ஊடகவியலாளர்கள் இதற்கும் அப்பால் தமிழ் இராணுவக் குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி இருந்தது. எனவே, தமிழ் ஊடகவியலாளர்கள் நாடு திரும்பும் விடயத்தில் இப்போது முடிவு எடுக்க முடியாத சூழலே உள்ளது.
கடந்த காலங்களில் இலங்கையில் அநேக ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். இன்று ஊடக சுதந்திரம் பற்றிப் பேசும் அநேகர், இவ்வாறு கொல்லப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்களைப் பற்றியே அதிகம் பேசுகிறார்கள். படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களான நிமலராஜன், ஜி. நடேசன் மற்றும் டி.சிவராம் போன்றவர்களைப் பற்றிப் பேசுவது குறைவு.
இத்தகையோரை கொலை செய்தவர்கள் இன்னமும் சமூகத்தில் சுதந்திரமாக உலாவரும் நிலையில், புலம் பெயர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் எவ்வாறு நாடு திரும்புவது?
எனவே, புலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர்களை இலங்கைக்கு மீள அழைத்துக் கொள்வதில் புதிய அரசாங்கம் உண்மையாகவே அக்கறை கொண்டிருக்குமானால், கடந்த கால ஆட்சிகளின் போது, கொல்லப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பாகவும் ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டமை தொடர்பாகவும் நீதியான விசாரணைகளை நடாத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் மாத்திரமே, இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நிலவுகின்றது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன், புலம்பெயர்ந்த ஊடகவிலாளர்களும் நம்பிக்கையோடு நாடு திரும்ப முன்வருவார்கள் என்ற செய்தியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago