Suganthini Ratnam / 2015 ஜனவரி 09 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மாற்றத்துக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வாக்களித்தார்களேயொழிய, ஏமாற்றத்துக்காக அல்ல என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு தமிழ் பேசும் மக்கள் என்றும் எப்போதும் சவாலாக இருந்ததும் இல்லை. இருக்கப்போவதும் இல்லை. மாறாக, சுயநல பதவி மோகம் கொண்ட தென்னிலங்கை அரசியல்வாதிகளின் செயற்பாடே தேசிய அரசியலிலிருந்து தமிழ் பேசும் மக்களை ஒதுக்கி வைத்துள்ளது என்பதற்கு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
பல தசாப்தகாலமாக தீர்க்கப்படாத இனப்பிரச்சினை, நாட்டில் புற்றுநோயாக புரையோடிப்போயுள்ளது என்பதை உணர்த்தும், அதன் தீவிரத்தன்மையை உணர்த்தும், அதன் தீர்வு தொடர்பான அரசியல் உணர்த்தும் அது பற்றி பேசுவதற்கோ ஏன் மூச்சுவிடுவதற்கோ எத்தரப்பும் விரும்பாத அரசியல் போக்கே ஜனாதிபதி தேர்தலை ஒட்டிய காலங்களில் நாம் தென்னிலங்கையில் தெளிவாகக் கண்டோம்.
இருந்தும், இத்தேர்தல் பல விடயங்களை தெளிவாக உணர்த்தியுள்ளது. தேசிய அரசியலிலிருந்து சிறுபான்மை மக்களை ஒதுக்க நினைத்து அவர்களை இனவாதிகள், மதவாதிகள், பிரிவினைவாதிகள் என்ற கருத்தியலை தென்னிலங்கையில் விதைக்க நினைத்தவர்களுக்கு, நாம் தென்னிலங்கை அரசியல் போக்குடன் கைகோர்க்க தயாராக உள்ளோம் என்பதை இந்தத் தேர்தல் எடுத்துக்காட்டியுள்ளது.
இதேபோன்று, பிரிவினைவாதிகளினதும் புலம்பெயர் தமிழர்களினதும் முகவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தென்னிலங்கை மக்களிடம் காட்ட நினைத்தவர்களுக்கு, கள நிலைமைகளின் யதார்த்தத்தை உணர்ந்து மாற்றத்துக்கான மைத்திரி நிர்வாகத்துக்கு தனது பங்களிப்பை வழங்கி இலங்கையில் உருவான புதிய அரசியல் கலாசாரத்துக்கு தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு தனது உண்மையான நேர்மையான சரியான பிம்பத்தை தென்னிலங்கைக்கு உணர்த்தியுள்ளது.
அம்மக்களது நியாயமான அரசியல் அபிலாஷைகளை ஜனநாயக வழிமுறைக்குள் தீர்ப்பதே எமது அரசியல் இலக்கு என்பதையும் உணர்த்தியுள்ளது. காலம் காலமாக எமது மண்ணையும் மக்களையும் அடக்கி ஒடுக்கி ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையில் வைத்திருந்த சத்திய ஆவேசத்தின் வெளிப்பாடாகவும் தமிழ் மக்களது வாக்களிப்பு முடிவினை நோக்கலாம்.
பறக்க நினைத்து இருந்ததை இழுத்து நிற்கும் கடந்தகால அரசியல் செயற்பாடுகள், புதிய ஜனாதிபதிக்கு இனப்பிரச்சினை தொடர்பான தனது அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ள சரியான வழிகாட்டியாக இருக்கும். இருக்கவேண்டும் என்பதையும் இத்தேர்தல் முடிவு புலப்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்தமாக தேர்தல் முடிவு, புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டிய அவசியத்தை, அவசரத்தை நாட்டின் புதிய தலைமைக்கு எடுத்தியம்பி உள்ளதுடன், தேசிய, சர்வதேச எதிர்பார்ப்பும் அதுவாகவே உள்ளது என்பதையும் எம்மக்களது முடிவு தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. மாற்றம் ஒன்றே மாறாதது மைத்திரி நிர்வாகத்தில் அம்மாற்றம் எமக்கு சாதகமாக அமையும் என்று நம்புவோமாக' எனக் கூறினார்.
9 minute ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025