2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புதிய ஜனாதிபதி பச்சைக்கொடி காட்டியுள்ளார்: செல்வராசா

Gavitha   / 2015 ஜனவரி 25 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

 
கடந்த நிலமைகளைத் தொடரவிடாமல், இராஜதந்திர முறையில் பேச்சுவாத்தைகளை நடாத்தி வருகின்றோம். இதற்கு மேலும் நடாத்துவதற்குள்ளோம். இதுவரையில் புதிய ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி பச்சைக்கொடி காட்டியுள்ளார். இது எமக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட வரம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு மாவட்டம் திருப்பழுகாமம் இந்துகலா மன்றத்தின் 36ஆவது ஆண்டுநிறைவு விழாவும் இந்து கலாமன்ற அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (25) திருப்பழுகாமம் ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது.


திருப்பழுகாமம், இந்து கலாமன்ற அறநெறிப் பாடசாலையின் அதிபர் வ.பரமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 


'65 ஆண்டு காலமாக நசுக்கப்பட்ட தமிழினம், அதிலும் 35 ஆண்டு காலமாக மிகவும் குரோதமான முறையில் நசுக்கப்பட்டார்கள். உறவுகளையும் உடமைகளையும் உயிர்களையும் இழந்த எமது தமிழ் மக்களின் பிரதிபலிப்பை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் காணக்கூடியதாக இருந்தது. 


கடந்த 2009ஆம் ஆண்டு போர் மௌனித்தபோது, அப்போதைய ஜனாதிபதி நாட்டில் சமாதானம் நிலவுவதாக அறிவித்திருந்தார். ஆனாலும் நிரந்தரமான, உண்மையான சமாதானம் ஏற்பட்டிருக்கவில்லை. 


2009ஆம் ஆண்டு மே 19க்கு பின்னர், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம்பேர் காணாமல் போயுள்ளார்கள், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன, இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள், இவ்வாறு அரச பயங்கரவாதம் தலை தூக்கியிருந்தது.
யுத்தம் மௌனித்த பின்னர் வடகிழக்கிலிருந்தும் மலையகத்திலிருந்தும் காணாமல் போனோர்களின் விபரங்கள் எம்மிடம் உள்ளன.


காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குமாறு அன்றைய ஜனாதிபதியினால், அமைக்கப்பட்ட காணாமல் போனோர்களைக் கண்டறியும் ஆணைக்குழு கூறியிருந்தது.


ஆனால், தற்போதைய அரசாங்கம், காணாமல் போனவர்கள் தொடர்பாக வேறுவிதமாக செயற்படுவதற்கு திட்டம் தீட்டியிருக்கின்றது. 


எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராசசிங்கம், ரவிராஜ் போன்றோர், அப்போதைய கொடூர ஆட்சிக்காலத்திலேதான் சுட்டுக் கொல்லப்படார்கள். 


அதற்காக வேண்டி பழைய ஆட்சிக்கு எதிராக வடகிழக்கு மலையகம் உட்பட்ட, தமிழ் மக்கள் மாத்திரமின்றி முஸ்லிம் மக்களும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்திருந்தார்கள். அந்த அளவுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றிருந்தது. இந்த நாட்டை ஆண்டு வந்த தலைவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் சிறுபான்மையினம் ஒன்று கூடி, கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்திருந்தார்கள். 


தற்போதைய அரசுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டு வருகின்றோம். ஆனால் அமைச்சுப் பதவிகள் எமக்கு வலியவே வந்தன. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அமைச்சுப் பதவியை பெறுவது எமது இலக்கு அல்ல. 
எனவே, அத்துமீறிய காணி அபகரிப்பு, அத்துமீறிய சிங்களக் குடியேற்றம் போன்ற பல விடயங்களை இந்த அரசினூடாக நிறுத்தப்போகின்றோம். 


அரசாங்கத்தை ஆதரிக்கின்றோம். ஆனால் தவறுகள் விடப்படுமிடத்து நடவடிக்கையும் எடுக்கத் தயங்கமாட்டோம் என்பது உண்மை. 65 வருட காலமாக மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், எம்மை ஏமாற்றி வந்துள்ளன.
எனவே தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்' என்று தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X