2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'வாக்குரிமையை நன்றிக்கடனாக பயன்படுத்தவேண்டாம்'

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 27 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

இறைமையுடைய ஒரு நாட்டின் சகல பகுதிகளிலும்  அபிவிருத்திகளை மேற்கொள்ளவேண்டியதும்  அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டியதும் அரசாங்கத்தின்; கடமையாகும். அதற்காக, வாக்குரிமையை நன்றிக்கடனாக அளிக்கவேண்டியதில்லை. எவருக்காகவும் எவரும் தமது  வாக்குரிமையை நன்றிக்கடனாக பயன்படுத்தவேண்டாம் என்று  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் மண்முனை மேற்கு பிரதேசக்கிளையின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை  மாலை விளாவெட்டவானில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம் என்றும் சமாதானம் வந்துவிட்டது என்றும்  முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த  ராஜபக்ஷ சொன்னார். சமாதானம் என்ற காலத்திலேயே வெள்ளை வான் கடத்தல்களும் கொலைகளும் கூடுதலாக இடம்பெற்றன.

புலிகளை அழித்ததைத்  தொடர்ந்து பாரிய அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பதாகவும் வடக்கு, கிழக்கில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சில வீதிகள், பாலங்கள் போடப்பட்டன.  மறுப்பதற்கு இல்லை. இறைமையுடைய ஒரு நாட்டின் சகல பகுதிகளிலும்  அபிவிருத்திகளை  செய்யவேண்டியதும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டியதும்  அந்த அரசாங்கத்தின் கடமையாகும்.

கருணா, பிள்ளையான் போன்றோர் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் ஜனாதிபதி பாலங்கள் போட்டுள்ளார். கட்டடம் கட்டியுள்ளார். வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளார். அதற்காக நன்றிக்கடனாக அவருக்கு வாக்குகளை அளியுங்கள் என்று கெஞ்சித் திரிந்தனர். என்ன நன்றிக்கடன் செலுத்தவேண்டும்? யாராக இருந்தாலும், செய்ய வேண்டியவற்றையே முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவும் செய்தார். இந்த அபிவிருத்திகளை   வேண்டியா 65 வருடகாலமாக எம் இனம் போராடியது? ஆயிரக்கணக்கான போராளிகளையும் இலட்சக்கணக்கான பொதுமக்களையும் இழந்தது?

அபிவிருத்திகளை செய்ததற்காக நன்றிக்கடன் செலுத்துவதாயின், தமிழர்களுக்கு தெரியும் நன்றி செலுத்துவது எப்படி என்று. தமிழர்கள் நன்றி செலுத்துவதில் சிறந்தவர்கள். அதற்காக வாக்குரிமையை நன்றிக்கடனாகச் செலுத்தவேண்டியது அல்ல. யாருக்கும் உங்களது வாக்குரிமையை நன்றிக்கடனாகப் பயன்படுத்தவேண்டாம்.

நன்றிக்கடன் வேறு. வாக்குரிமை வேறு. வாக்குரிமை என்பது ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட ஜனநாயக உரிமையாகும். அதனை எப்படி வழங்கவேண்டும் என்று தமிழ் மக்களுக்கு தெரியும். 65 வருடம் போராடியதால், தமிழ் மக்கள் அரசியலை நன்கு படித்துவைத்துள்ளனர். எங்களுக்கும் அரசியல் கற்பிக்கும்  அளவில் சாதாரண பாமர மக்கள் கூட உள்ளனர்.

2009ஆம் ஆண்டு  நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில் மிகப்பெரிய பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டதாகவும்  வடக்கு, கிழக்கு என எல்லாம் நான்தான் என்றார். 2010 தேர்தலில் அவருக்கு மக்கள் ஆகிய நீங்கள் பாடம் படிப்பித்தீர்கள். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு வடக்கு, கிழக்கிலிருந்து தமிழத்; தேசியக் கூட்டமைப்பு சார்பாக அனுப்பினீர்கள். அது அவருக்கு தலை அடியாக அமைந்தது.
தொடர்ந்துவந்த அனைத்துத் தேர்தலிலும் பேரினவாதிகளுக்கு தமிழ் மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளார்கள்.

எதிர்காலத்திலும் எமது சமூகத்தைப் பலப்படுத்த ஒரே குடையின் கீழ் நின்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கவேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X