2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

முதலமைச்சர் பதவிக்கு இராசையா துரைரெட்ணமே தகுதியானவர்: அருண்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 28 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட   அமைப்பாளர் அருண் தம்பிமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அமைப்பில் ஏற்பட்டுள்ள இழுபறி  தொடர்பில்  செவ்வாய்க்கிழமை (27)  கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

'கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சராக வரவேண்டியவர் தமிழரா? அல்லது முஸ்லிமா? என்ற இழுபறி நிலை தொடர்கின்ற இந்த வேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கி கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைக்கும் வண்ணம் எனது கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

அந்த வகையில், தமிழர் தரப்பின் மாகாணசபை வரலாற்றில் 1988இல் உதயமான வடகிழக்கு இணைந்த மாகாணசபையில் உறுப்பினராகத் தெரிவானவரும் 2008ஆம் ஆண்டு உருவான கிழக்கு மாகாணசபைக்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்டவரும் மீண்டும் 2012இல் நடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று மூன்றாவது முறையாகவும் மாகாணசபையின் உறுப்பினராக தொடர்ந்து இருந்துவருபவருமான இராசையா துரைரெட்ணமே  முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர்.

அம்பாறையில் பிறந்து, மட்டக்களப்பில் அரசியல் புரிந்து, திருகோணமலையில் மணம் முடித்திருக்கும் இராசையா  துரைரெட்ணமே கிழக்கின் தலைமைத்துவத்துக்கு  உண்மையில் தகுதியானவராக காணப்படுகின்றார் என்றும்  இந்தக் கோரிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவுக்கும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்  கொண்டுசெல்லவுள்ளேன்' எனக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X