Gavitha / 2015 ஜனவரி 31 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அஞ்சல் மற்றும் முஸ்லிம் கலாசார அலுவல்கள் அமைச்சினூடாக அஞ்சல் திணைக்கள சேவைகளை மேம்படுத்த வரவு செலவுத் திட்ட நிதிக்கு மேலதிகமாக 750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த அபிவிருத்தி மாற்றம் அடுத்த ஓரிரு மாதங்களில் இடம்பெறும் என்று அஞ்சல் மற்றும் முஸ்லிம் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அஸனார் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
ஏறாவூர் தபாலகத்துக்கு சனிக்கிழமை (31) திடீர் விஜயம் மேற்கொண்டு தபாலகத்திலுள்ள குறை நிறைகளைக் கேட்டறிந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில், சுமார் 40 ஆயிரம் மக்களுக்கு சேவை வழங்கும் ஏறாவூர் அஞ்சலகத்தில் காணப்படும் ஊழியர் பற்றாக்குறை, தளவாடப் பற்றாக்குறை, சேவை பெறும் பொது மக்களுக்கான வசதியின்மை, மீராகேணி உப அஞ்சலகத்தைத் தரமுயர்த்துதல், ஏறாவூர் தக்கியா பகுதி மக்களின் நலன் கருதி, புதிய உப தபாலகம் ஒன்றை உருவாக்குதல் உள்ளிட்ட வேண்டுகோள்கள் ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவரினால் முன்வைக்கப்பட்டன.
இதன்போது செயலாளர் அங்கு உரையாற்றுகையில்,
நான் அதிகாரிகள் அழைக்காமலேயே தபாலகங்களுக்கு விஜயம் செய்து குறைநிறைகளைக் கண்டறிகின்றேன். கடந்த மூன்று தசாப்தங்களாக வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் எல்லாவகையிலும் நசுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு அபிவிருத்தியில் பின் தள்ளப்பட்ட நிலைமை காணப்பட்டது.
ஆனால், இப்பொழுது நல்லாட்சி அமைப்பொன்று மக்களால் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த ஆட்சிக் காலத்தில் மக்களின் கோடிக்கணக்கான பணம் தேவையற்ற செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டதை நாடே அறியும். அந்த வீணான செலவுகள் எல்லாம் இப்பொழுது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அதன் முதல் வியாழக்கிழமை (29) வெளியிடப்பட்ட வரவு-செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மை அளிக்கப்பட்டிருக்கின்றது.
மக்களுடைய அன்றாட அத்தியாவசியத் தேவைகள் கவனத்தில் எடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டிருக்கின்றது. இன்னும் சிலகாலம் செல்லச் செல்ல மக்களுடைய வாழ்க்கைச் சுமையும் வாழ்க்கைச் செலவும் அதிகளவு குறைவதற்கான வாய்ப்பு இப்பொழுது ஏற்பட்டிருக்கின்றது.
கடந்த காலங்களில் நிதி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 75 சதவீதமான நிதி ஒதுக்கீடுகளை கடந்த அரசாங்கம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு கொடுத்துவிட்டு அதற்கு தேவையான அனைத்தையும் செய்து வந்தது.
ஒட்டு மொத்தமாக வறுமைப்பட்ட மக்கள் இதனால் பயனடைந்தார்களா என்று கேட்டால் அதற்குப் பதிலளிப்பது சிரமம்தான்.
பிரதித் தபால் மா அதிபர்களுக்கும் தபால் அத்தியட்சகர்களுக்குமான புதிய வாகனங்கள் விரைவில் வழங்கப்படவிருக்கின்றன.
இதற்கும் மேலதிகமாக தபால் விநியோகத்துக்கான வாகனங்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் நாடு முழுவதற்கும் 784 தபால்காரர்களை நியமிக்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
நான் உங்கள் சேவைக்காக இருப்பதால் பொதுமக்களும் தபால் திணைக்களத்தின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அனைவரும் என்னேரமும் என்னோடு தொடர்புகளை வைத்துக் கொள்ளலாம்.
தபால் திணைக்களம் பெருமைப்படக் கூடிய சேவைகளை வழங்கும் ஒரு பாரம்பரிய நிறுவனமாக இருப்பதோடு அதன் ஊழியர்களும் பெருமைக்குரியவர்கள். அடுத்த ஆண்டில் தபால் திணைக்களம் அரசாங்கத்திடமிருந்து எதுவித நிதியையும் எதிர்பாராது சுயமாகவே நிதியைத் தேடிக் கொள்கின்ற நிறுவனமாக இயங்குவதற்கான இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது தபால் திணைக்களம் 80 சதவீதம் சுயமாக இயங்கும் இலக்கை அடையப்பெற்றுள்ளது.
நூறு வீதம் சுயமாக இயங்கும் அந்த இலக்கு அடையப் பெற்றால் தபால் திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையைக் கூட வழங்க முடியும்.
மாதாந்தம் தபாலகத்தை நோக்கி பொது சன உதவி மாதாந்தக் கொடுப்பனவுகளைப் பெற வரும் ஏழைகள் தபாலக ஓரங்களில் நிலத்தில் குந்திக் கொண்டு நாள் முழுக்க தமது கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ள காத்துக்கிடக்கிறார்கள்.
அவர்களுக்கு கிடைப்பது ஒரு சில நூறு ரூபாய்கள் தான். இந்த நிலைமை பரிதாபகரமானது. இவ்வாறு ஏழை மக்கள் கால்கடுக்க நாளெல்லாம் நின்று கொண்டிருப்பதைத் தவிர்க்க தபாலதிபர்கள் ஏதோவொரு பொறிமுறையைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago