2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'கடமைகளை, பொறுப்புகளை உணர்ந்து செயற்படவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 01 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடந்தகால மற்றும் சமகால நிகழ்வுகளிலிருந்து முஸ்லிம்கள் சிறந்த பாடங்களை கற்றுக்கொள்ளாமையால், அதிகம் அதிகமாக இழப்புக்களை சந்திக்கவேண்டியுள்ளதாக   இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் தலைவர் உஷ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் தெரிவித்தார்.

'இன்றுள்ள பாடங்களும் இனியுள்ள கடமைகளும்' எனும் தொனிப்பொருளில் பிரமுகர்களுக்கான கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் ஜாமிஉல் அக்பர் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து பேசிய அவர்,

'இன்று எமது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆரோக்கிய சூழலில் முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பு என்பது காத்திரமாக அமையவேண்டும். அப்பொறுப்பை, கடமையை உணர்த்தும் வகையில் நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம் பிரமுகர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்குகளை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பு நடத்துகின்றது.

கருத்தரங்குகளின் நோக்கம், பல்லின சமூகங்கள் வாழ்கின்ற நாட்டில் முஸ்லிம்கள் அடுத்த சமூகத்தோடு எவ்வாறு சமூக சகவாழ்வை மேற்கொள்ளவேண்டும் என்பதும் நாட்டின் அபிவிருத்தியில் முஸ்லிம்கள் தமது காத்திரமான பங்களிப்பை எவ்வாறு வழங்கலாம் என்பதுமேயாகும்.

முஸ்லிம் சமுதாயம் எப்பொழுதுமே சேவை பெறுநர்களாக மாத்திரம் பயனாளிகள் என்ற பட்டியலுக்குள் இருந்துவிடாமல், சேவை வழங்குநர்களாகவும் இருந்து தமது கடமையை, பொறுப்புகளை நிறைவேற்றவேண்டும். சதாகாலமும் பிரச்சினைகள் பற்றி பேசிக்கொண்டிராமல், பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றி ஆரோக்கியமான கருத்தாடல்களை மேற்கொள்ளவேண்டும்.

கடந்தகால மற்றும் சமகால நடப்புகளிலிருந்து சிறந்த பாடங்களை கற்றுக்கொள்ளாமையால்,  முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் மட்டுமல்ல, பூகோள ரீதியிலும் இழந்து நிற்பவைகள் ஏராளம். உலக முஸ்லிம்களிடம் வளங்கள் கட்டுண்டு கிடக்கின்றன. அதேவேளை, அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தும், அதிக நிலப்பரப்பை கொண்டிருந்தும் பெரும் பலவீனப்பட்ட சமுதாயமாக இருந்துகொண்டிருக்கின்றார்கள்.

இதற்கு இறையச்சம் இல்லாததே முக்கிய காரணமாகும். இறைவன் எமக்கு தந்த அருட்கொடைகளை ஆய்வு செய்து அவற்றை மனித குலத்தின் நன்மைக்காக பயன்படுத்தாமல் நாம் வெறுமனே சிந்தனையற்றவர்களாக இருந்துகொண்டிருக்கின்றோம். எனவே, நாம் கடந்தகால மற்றும் நிகழ்கால அனுபவங்களிலிருந்து சிறந்த பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்' என்றார்

இந்நிகழ்வில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் மாநில மஜ்லிஸ் சூறா சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் ஆர்.எம்.இப்றாஹிம், மாவனல்லை ஆயிஷா சித்தீக்கா கலாபீட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ஹுஸைன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X