2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'இன வேறுபாடுகளை களைவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பேன்'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 01 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'எனது ஆட்சிக்காலத்தில் இன வேறுபாடுகளை களைவதற்கான சகல முயற்சிகளையும் முன்னெடுப்பேன். இங்கு ஓர்  இனத்துவேசம் அற்ற ஆட்சி நடைபெறும்' இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ்; நஸீர் அஹமட் தெரிவித்தார்.

வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கு நீர்த்தாங்கிகளும் மோட்டார் இயந்திரங்களும் வழங்கும் நிகழ்வு, ஏறாவூர் அல் -அஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் சனிக்கிழமை (28) மாலை நடைபெற்றது.  இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து  உரையாற்றிய அவர்,

'கிழக்கு மாகாணத்தில் இன முறுகல் ஏற்படாதவண்ணம் பாதுகாப்பதில் அதிகாரிகளுக்கும் அதிக பங்கும் பணியும் உள்ளன.  அதிகாரிகள் தங்களது கடமை,  பொறுப்புகளை மறந்து அரசியல் செய்து இனக் குழப்பங்களையும் கசப்பு உணர்வுவையும் ஏற்படுத்தக்கூடாது.

கடந்தகாலத்தில்; பல உயர் அதிகாரிகள் தங்களது கடமை, பொறுப்புகளை மறந்து அரசியல் செய்தமையால்,  இனங்களுக்கிடையில் கசப்பு உணர்வு தோன்ற  ஒரு காரணமாக அமைந்திருந்தது. இத்தகைய தவறு இனிமேலும்; இடம்பெறாதவண்ணம் அதிகாரிகள் நடக்கவேண்டும்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் உறவு சேவைகளுக்கூடாக கட்டியெழுப்பப்பட வேண்டும். இதில் அரச அதிகாரிகளின் பங்கு இன்றியமையாதது.

30 அல்லது 40 வருடங்களாக தத்தமது போக்கில்  இருவேறு துருவங்களாக சென்ற ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையும்; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையும் ஒன்றுபட்டு  நல்லாட்சிக்கான கரத்தை நீட்டமுடியுமாக இருந்தால்,  ஏன் ஒரு மொழி பேசி ஒரே பூகோள அமைப்பில் வாழ்கின்ற தமிழ் - முஸ்லிம்கள் ஒற்றுமைப்படமுடியாது?

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இணைந்து பணியாற்றவேண்டிய கடமைப்பாடு இருக்கின்றது. அரசியல் தலைமைகளும் நிர்வாகமும் மக்களும் வேறு வேறு திசையில்  சென்றால், கிழக்கு மாகாணத்தில்  அபிவிருத்தியை காணமுடியாது.
எனது ஆட்சிக்காலத்தில் இன, பேத அடிப்படையில் யாராவது  செயற்பட முற்படுவராயின்,  அவருக்கு  எதிராக நான் கடுமையாக நடந்துகொண்டு தண்டிப்பேன் என்பதை சமூக ஒற்றுமையின் காவலன் என்ற வகையில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இன்னமும் அதிக நட்புறவுடன் செயலாற்றினால், பாதிக்கப்பட்ட தமிழ்,  முஸ்லிம் மக்களின் கண்ணீரை துடைக்கமுடியும்.    பிரிந்து நின்றால் ஒருபோதும் தமிழ், முஸ்லிம் ஒற்றுமை சாத்தியப்படாது' என்றார்.

இந்நிகழ்வில் நேயம் மக்கள் மேம்பாட்டுக்கழகத்தின் தலைவர் ஐ.இஸ்ஹாக், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X