2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி சுதந்திரமாக நடமாடும் சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டும்: பொன்.செல்வராசா

Suganthini Ratnam   / 2015 மார்ச் 02 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,கே.எல்.ரி.யுதாஜித்

பயங்கரவாத தடைச்சட்டத்தை  நீக்கி தமிழ் இளைஞர்கள் சுதந்திரமாக நடமாடச் செய்வதற்கான சூழ்நிலையை புதிய அரசாங்கம் ஏற்படுத்தவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

வவுணதீவு, காளையடிக்குளம் வீரமாகாளி அம்மன் கோவில் முன்றலில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை  மக்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'எமது தமிழ் மக்கள் யுத்த காலத்தில் அனுபவித்த வேதனையை  விட, யுத்தம்   முடிந்ததும் அன்றைய அரசாங்கத்தினால் பல துன்பியல் நிகழ்வுகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள். அக்காலத்தில்; எத்தனையோ பேர் கொல்லப்பட்டார்கள். எத்தனையோ பேர் காணாமல்; போனார்கள். எத்தனையோ பேர் கடத்தப்பட்டும் இருக்கின்றார்கள்.  

வடக்கு மாகாணத்தை விட, கிழக்கு மக்கள் தமிழ்த்; தேசியத்தில் ஊறியவர்கள். தமிழ்த் தேசியத்தை ஆதரிப்பவர்கள். ஏனெனில்,  2010ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வடக்கிலிருந்து, மாற்றுக்கட்சிகளிலிருந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டபோதும், கிழக்கில் அதுவும் மட்டக்களப்பில் தெரிவுசெய்யப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சார்ந்தவர்களே. அந்தளவுக்கு எமது தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பால் நாட்டம் கொண்டுள்ளார்கள். அதுபோலவே, கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும் இடம்பெற்றது.

இன்னும் எமது இனப்பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால், அதற்கான பச்சைக்கொடி ஜனாதிபதியால்   காட்டப்பட்டுள்ளது.

எமது சில பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு இல்லாதுவிட்டாலும், வடக்கில் எமது மக்களின் 6,000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் அவர்களுக்கு பகுதி, பகுதியாக மீளக் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்த ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்கள பேரினவாத கட்சிகளும் தற்போது தமிழர்களின் கோரிக்கைகள் நியாயமானது என்று கூறுமளவுக்கு  தமிழ் மக்களுக்காக அவர்களும் வாதிடும் அளவுக்கு  மாற்றம் வந்திருக்கின்றது.

இருப்பினும், பழைய நிலைமைகள் இன்னும் சிறு, சிறு விடயங்களில் மாறாமல் இருப்பதை நாம் காண்கின்றோம். எமது இளைஞர்கள் கிழக்கு ஆசிய நாடுகளில் பணிபுரிந்து விட்டு மீண்டும் இலங்கைக்கு வரும்போது, அவர்கள் விமான நிலையத்தில் கைதுசெய்யப்படுவது எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாக இருக்கின்றது.

இதற்கு காரணம், பயங்கரவாத தடைச்சட்டம். இதனை இந்த அரசாங்கம் நீக்கவேண்டும் என்பதில் நாம் தீவிரமாக இருக்கின்றோம். அதுபோல் இதனை பல நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் நீக்கவேண்டும் என்று அக்கறை செலுத்துகின்றன. எனவே, இந்த அரசாங்கம் இதனை நீக்கி எமது இளைஞர்களை சுதந்திரமாக நடமாட விட வேண்டும். அதற்கு நாம் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டும் வருகின்றோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எவ்வாறு நாம் செயற்பட்டோமோ, அதுபோல் ஏனைய வருகின்ற தேர்தல்களில் எல்லாம் எமது தமிழ் மக்களின் ஆதரவு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே  இருக்கும் என்பதில் பூரண நம்பிக்கை இருக்கின்றது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X