2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

5 கிராம சேகவர் பிரிவுகளை மீண்டும் ஒட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைக்க கோரிக்கை

Super User   / 2011 மே 09 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இருந்து பிரித்து கிரான் பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்ட ஐந்து கிராம சேவகர் பிரிவுகளையும் மீண்டும் ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைத்துத் தருமாறும் மாவட்ட அரசாங்க அதிபராக ஒரு சிங்களவர் ஒருவரை நியமனம் செய்ய கோரியும் கூறி கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேச மக்கள் இன்று கவனஈர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டு ஜனாதிபதிக்கான மகஜரினை ஓட்டமாவடி பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.

அம்மகஜரில் இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புணானை மேற்கு விவசாய கண்டத்தில் ஏறக்குறைய 8500 ஏக்கர் விவசாயக் காணிகள் உள்ளன. 2800 விவசாயிகள் இப்பகுதியில் நெற்செய்கையில் ஈடுபட்டுவருகின்றனர். இக்காணிகள் அமைந்துள்ள பிரதேசம் கோறளை மேற்கு பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குட்பட்டதும், இப்பிரதேசம் 2005ம் ஆண்டு தற்காலிகமாக ஓட்டமாவடி பிரதேச செயலகத்திலிருந்து பிரித்தெடுத்து கோறளை தெற்கு கிரான் செயலகத்துடன் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டதாகும்.

வாகனேரி, வடமுனை, ஊத்துச்சேனை, கள்ளிச்சை, புணானை ஆகிய 05 கிராம சேவகர் பிரிவுகளும் கோறனை மேற்கு ஓட்டமாவடிப் பிரதேச செயலகத்திலிருந்து கோறனை தெற்கு கிரான் பிரதேச செயலகத்துடன் தற்காலிகமாக இணைக்கப்பட்டதாகும்.

கிரான் பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்ட காலத்திலிருந்து இப்பிரதேச செயலகத்தின் செயலாளர் இப்பகுதியில் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் விவசாயிகளை இப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தி முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான நெற்காணி மண்டூர், ஊத்துச்சேனை, சந்திவெளி போன்ற தமிழ் மக்களுக்குப் பகிர்ந்தளிக்க முயற்சிகளை மேற்கொண்டு தமிழ் மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளார். மேற்படி காணிகளின் ஆவணங்கள் புலிபாய்ந்தகல் பிரதேச செயலகத்தில் வைத்து முஸ்லிம் விவசாயிகளின் ஆவணங்கள் திட்டமிட்டு விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டுள்ளன.

இக்காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் 1942ம் ஆண்டு தொடக்கம் வழங்கப்பட்டு முஸ்லிம் விவசாயிகளின் கைவசம் உள்ளது. கமத்தொழில் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 06 விவசாய அமைப்புக்களும் உள்ளன. வாழைச்சேனை கமநல கேந்திர நிலையத்தில் காணிப்பதிவேட்டு இடாப்பில் பதிவு செய்யப்பட்டு விவசாய அறிமுக அட்டையும் (விவசாயப் புத்தகம்) வழங்கப்பட்டு உரமானியம் பெறப்படுகின்றது.

மேலும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இப்பகுதி விவசாயிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுக் கொண்டிருந்த விதை நெல்லும் தடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலை கடந்த 05.05.2011ஆம் திகதி மேற்படி பிரதேசத்தில் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாடிகளில் கிரான் பிரதேச செயலாளர் தவராஜா கையொப்பமிட்ட வெளியேற்ற உத்தரவுப் பத்திரங்களை இப்பகுதி கிராம சேவையாளர்கள், பொதுமக்கள் சகிதம் ஒட்டிச்சென்றுள்ளார்கள். எதிர்வரும் 10.06.2011ஆம் திகதிக்கு முன்பாக மேற்படி காணிகளை விட்டு அப்புறப்படுத்துமாறு கடிதத்தில் வேண்டப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கு முகமாக 09.05.2011ஆம் திகதி திங்கட்கிழமை முழுநாள் கடைஅடைப்பு செய்து உங்களது அதிருப்தியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இச்செயலானது இந்நாட்டில் மீண்டும் தமிழ், முஸ்லிம் இனக்கலவரத்தைத் தூண்டும் செயலென மக்கள் அச்சம் கொள்கின்றனர்.

மேற்படி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் முகமாக கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.

1.    மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஒரு சிங்கள அதிகாரியை நியமனம் செய்தல்.

2.    நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளராக ஒரு சிங்கள அதிகாரியை நியமனம் செய்தல்.

3.    கமத்தொழில் திணைக்கள உதவி ஆணையாளராக ஒரு சிங்கள அதிகாரியை நியமனம் செய்தல்.

4.    கிரான் பிரதேச செயலளார் ஏ.வு. தவராஜாவை உடனடியாக இடமாற்றம் செய்தல்.

5.    மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து குறிப்பாக கல்குடாத் தொகுதியிலிருந்து புலிகளால் விரட்டி அடிக்கப்பட்ட சிங்கள மக்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களுக்கு குடியமர்த்தல்.

6.    ஓட்டமாவடி கோறளை மேற்கு பிரதேச செயலக நிர்வாகத்திலிருந்து தற்காலிகமாக பிரிக்கப்பட்டு கிரான் பிரதேச செயலகத்துடன் சேர்க்கப்பட்ட 05 கிராம சேவையாளர் பிரிவுகளையும் மீண்டும் ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைத்தல்.

தலைவர்

அமானா விவசாயிகள் அமைப்பு
மினுமினுத்தவெளிக் கண்டம்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .