2025 மே 15, வியாழக்கிழமை

90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மின்னிணைப்பு வழங்க முடிந்துள்ளது: ஹிஸ்புல்லாஹ்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 29 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


தற்போது நாட்டிலுள்ள 36,000 கிராமங்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கும் மின்னிணைப்பு வழங்க அரசாங்கத்தால் முடிந்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி  கையளிக்கும் நிகழ்வு  கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவக மண்டபத்தில் திங்கட்கிழமை (28) நடைபெற்றது. இங்கு  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்து கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் விரிவுபடுத்துதலும் அவர்களின் கல்வி, சுகாதாரம் போன்ற சமூக அபிவிருத்திக்கு தேவையான சுற்றாடலை தோற்றுவிப்பதும் கிராமிய மக்களின் சந்தைப்படுத்தலுக்கான தேவைகளையும் தேசிய பொருளாதாரத்தின் பலன்களையும் ஆகக்கூடியளவில் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்புபடுத்துதலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிகளாக உள்ளன.

வருடாந்த வரவு - செலவுத்திட்டத்தின் மூலம் இந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் இந்த அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகளை, கிராமங்களையும் சமூகத்தையும் இலக்காகக்கொண்ட அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்காக பயனுறுதி உள்ளவாறு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டை அபிவிருத்தி செய்து வருவதுடன், உலகில் ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள வசதி வாய்ப்புக்கள் எமது மக்களுக்கும் கிடைக்கச் செய்வதற்காக செயலாற்றிக்கொண்டிருப்பது நாம் எல்லோரும் அறிந்த விடயமாகும்.
விசேடமாக ஜனாதிபதி, முதலாவதாக நாட்டிலுள்ள மக்களுக்கு தேவைப்படுவது அச்சம் மற்றும் சந்தேகமற்ற வாழக்கூடிய சூழலே என புரிந்துகொண்டிருந்தார். இதன் காரணமாக நாட்டில் 30 வருடகாலமாக அற்றுப் போயிருந்த சமாதானத்தை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்தார் என்பதை எல்லோரும் அறிவீர்கள்.

அதேபோன்று ஒரு நாடு அபிவிருத்தியடைய வேண்டும் என்றால் அடித்தளமானது அந்நாட்டின் வீதிக் கட்டமைப்பு என்பதன் அவசியத்தை உணர்ந்துகொண்டு  விவசாயப் பாதையிலிருந்து மீனவப் பாதை, பிரதேச சபை வீதி, மாகாண சபை வீதி, பெருந்தெருக்கள் அதிவேக வீதி  மற்றும் மேம்பாலங்களுக்கு முன்னுரிமை, மின் உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து நாட்டில் பல்வேறுபட்ட மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

இதனால், எமது  நாட்டில்; 36,000 கிராமங்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மின்னிணைப்பையும்  வழங்க முடிந்துள்ளது. எமது  பிள்ளைகளுக்கு அவசியமான கல்வியினை பெற்றுக்கொடுப்பதில் அதிக கவனம் செலுத்தியுள்ளதுடன்,  ஆரோக்கியமுள்ள சமூகத்தை  உருவாக்குவதற்காக கிராமங்களிலுள்ள சிகிச்சை  நிலையங்களிலிருந்து பிரதான வைத்தியசாலைகள்வரை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி ஆவண செய்தார்.

அதேபோன்று தொலைத்தொடர்பாடல் போன்ற அடிப்படை வசதிகளையும் அபிவிருத்தி செய்துவருவதுடன், நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முன்னுரிமை அளித்துள்ளார்.

எங்களது பொருளாதாரம் மென்மேலும் உறுதியடைந்து வருகின்றது. விசேடமாக பண வீக்கம் குறைந்து வேலையற்றோர் வீதமும் குறைந்துள்ளதுடன், நாட்டின் அபிவிருத்தி வேகம் அதிகரித்து தனி நபர் வருமானமும் அதிகரித்துள்ளது. நாட்டின் கடன் சுமை தேசிய உற்பத்தி வீதத்துடன் ஒப்பிடுகையில் கணிசமானளவு குறைந்து நாடு பொருளாதார ரீதியில் உறுதியான நிலையில் உள்ள இச்சந்தர்ப்பத்தில் இந்நாட்டு மக்களாகிய நீங்கள் அனைவரும் சவால்களை பொறுப்பேற்று செயற்பட முன்வரவேண்டும் என அனைவரையும் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.

பொருளாதார ரீதியாக ஒவ்வொரு குடும்பத்தையும் முன்னேற்ற வேண்டும். அதற்காகவே திவிநெகும  (வாழ்வின் எழுச்சி) திணைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் முதலிடத்தில் இருப்பதற்கு படுவான்கரை பிரதேசங்களின் வறுமை ஒரு காரணமாகும். தற்போது மண்முனைப்பாலம் திறக்கப்பட்டதன் மூலம் புதிய பொருளாதார வளர்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படும்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிரான் பாலத்தையும் நிர்மாணித்து தருமாறு மட்டக்களப்பிலுள்ள அரசியல் தலைவர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், ஜனாதிபதி இந்தப் பாலத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.  இதற்காக 2,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய 4,000 வீடுகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 2,500 வீடுகள் வழங்கப்பட்டன. அதில் அரைவாசி வீடுகளின் நிர்மாண வேலைகள் நிறைவடைந்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டங்களை நாங்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்திலேயே நடத்தி வருகின்றோம். அடுத்த மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை கொக்கட்டிச்சோலை கருணா அம்மான் மண்டபத்தில் நடத்த திட்ட மிட்டுள்ளோம்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .