2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

‘இனவாத இறுமாப்பிலேயே அரசியல் இனியும் நகரப்போகிறது’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் அரசியல் போக்கு கடந்த காலத்தில் இருந்து வந்ததுபோல இனியும் இனவாத இறுமாப்பிலேயே நகரப்போகிறது என கிழக்கு மாகாண முன்னாள் முதமலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னோக்கிய சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக அவர் இன்று (14) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விவரங்கள் சிலாகித்துச் சொல்லப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த கால இலங்கை அரசியல்போக்கு என்பது இலங்கைச் சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கையும் பாதுகாப்பும் தரக் கூடியதாக அமைந்திருக்கவில்லை.

அதனால் பேரழிவுகளையும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளையும்  இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்கள் சந்திக்க வேண்டியிருந்தது.

அந்த நிலைமை இனியும் மாறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

எதிர்கால அரசியல் போக்கும் அவ்வாறு நம்பிக்கையும் பாதுகாப்பும் உரிமைகளையும் உறுதிப்படுத்தும் ஒன்றாக இருக்கப்பபோகிறது என்பதற்கான எந்த உத்தரவாதங்களுமில்லை.

தற்போது நாட்டின் தலைவரைத் தீர்மானிக்கும் தேர்தல் முன்னெடுப்புக்களில் பேரின மதவாத சிந்தனைகள் மேலோங்கிக் காணப்படுகின்றன.

இதன் உள்ளார்ந்த அர்த்தம் என்னவெனில் இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்கள் கருத்திற்கொள்ளப்படவில்லை என்பதேயாகும்.

நாட்டின் அதிபர் ஒரு இனத்திற்கு ஒரு மதத்திற்கு உரியவர் என்கின்ற சிந்தனையோட்டத்தைத் தகர்த்தெறிந்து ஒட்டு மொத்த இலங்கையர்களுக்கும் உரியவர் என்கின்ற பரந்த ஐக்கியப்பட்ட சிந்தனை கொண்டவராக இருக்க வேண்டும் என்பது சிறுபான்மை மக்களின் பேரவாவாகும்.

ஆனால் இந்த ஆதங்கத்தை நிறைவேற்றும்படியான ஆக்கபூர்வ சிந்தனையோட்டங்கள் இலங்கையின் பெரும்பான்மை இன அரசியல் காலாச்சாரத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இலங்கை பௌத்த சிங்கள மக்களின் நாடு என்பதே கருப்பொருளாக நோக்கப்படுவதால் சமீப எதிர்காலத்தில் இலங்கை சிறுபான்மை மக்களுக்கு விமோசனமும் அதன் மூலமாக இலங்கை சுபீட்சமடையும் என்ற கனவும் நனவாகவே போகலாம்.

ஜனாதிபதித் தேர்தலில் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்காக அலைமோதும்  தரப்புக்கள் சிறுபான்மை இனங்களுக்கு நம்பிக்கையும் பாதுகாப்பும் தரக்கூடிய எந்தவொரு உறுதி மொழியையும் இதுவரை அளிக்கவில்லை என்பதை உற்றுக் கவனிக்க வேண்டும்.

சிங்களவர்களையும், பௌத்த மதத்தையும் கட்டிக்காக்கக் கூடிய ஒருவரையே நாட்டின் அதிபராக முன்மொழிந்து பிரச்சாரம் செய்வதில்தான் வெற்றி உண்டென்று பேரினவாத சக்திகள் களமிறங்கியிருக்கின்றன.

இதேவேளை, தேச மக்களுக்கு நீதியைப் பாரபட்சமின்றி நிலைநாட்டி இனவேறுபாடுகளுக்கப்பால் இயங்கக் கூடிய  விழுமியங்களைக் கொண்ட ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற ஆதங்கத்தை சிறுபான்மை இனங்கள் கொண்டிருக்கின்றன.

ஆகவே, எதிர்காலத்தில் வர இருக்கும் இலங்கையின் அதிபர் சிறுபான்மையினருக்கான ஜனாதிபதியாகவோ அல்லது பெரும்பான்மையினருக்கான ஜனாதிபதியாகவோ என்றில்லாமல் ஒட்டுமொத்த நாட்டுப் பிரஜைகளுக்குமான ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்பதிலேயே சிறுபான்மையினரின் நம்பிக்கையும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.

ஆனால், இவற்றை உறுதிப்படுத்தக் கூடிய எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் களத்தில் நிற்கப்போவதில்லை. இது கவலையளிக்கும் ஒரு விடயமாக மேலோங்கியுள்ளது.' என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X