Princiya Dixci / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
“மார்ச் மாதம் நடக்கவிருக்கின்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடருக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும், சர்வதேச சமூகத்துக்கும் தமிழ் பேசும் மக்கள் சொல்லப் போகின்ற செய்தியாக இந்த எழுக தமிழ் கிழக்குப் பிரகடனம் அமைந்திருக்கும்” என, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான மட்டக்களப்பு பிரதிநிதி தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணியும் பிரகடனமும் தொடர்பில், நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரனின் மட்டக்களப்புக்கான வருகையோடு, எழுக தமிழ்கிழக்குப் பிரகடனம் உலகறியச் செய்யப்படும்.
வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து ஆரம்பமாகும் எழுக தமிழ் பேரணி, நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தைச் சென்றடைந்ததும் அங்கு காலை 11 மணிக்கு பொதுக் கூட்டமும் எழுக தமிழ் பிரகடனமும் இடம்பெறும்.
இந்நிகழ்வுகளில் தமிழ், முஸ்லிம் மக்கள் சுமார் 10 ஆயிரம் பேர் அணிதிரள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே இணைந்திருக்கின்ற சுரேஷ் பிரேமச்சந்திரனைத் தலைமையாகக் கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி, சித்தார்த்தனை தலைமையாகக் கொண்ட புளொட் கட்சி, மேலும், கஜேந்திரகுமாரை தலைவராகக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட பிரதிநிதிகளும் மட்டக்களப்பு எழுக தமிழ் பேரணியில் பங்குபற்றுகின்றார்கள்.
மேலும், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் எஸ். சிற்றம்பலம், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரும் இருதய சத்திர சிகிச்சை நிபுணருமான பி. லக்ஷ்மன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் இப்பேரணியில் பங்கேற்பார்கள்.
மார்ச் மாதம் நடக்கவிருக்கின்ற மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடருக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தமிழ் பேசும் மக்கள் சொல்லப் போகின்ற செய்தியாக இந்த எழுக தமிழ் கிழக்குப் பிரகடனம் அமைந்திருக்கும்.
நீண்டகாலமாக தீர்வு காணப்படாமல் இருக்கின்ற தமிழ் பேசும் சமூகங்களின் பிரச்சினைகள் உடனடியாக நிரந்தர அரசியல் தீர்வாக அமுலுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கையாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago