2025 மே 07, புதன்கிழமை

போரதீவுப்பற்று மக்களின் ஆர்ப்பாட்டம் நிறைவு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

காட்டு யானைகளை விரட்டுவதற்கு நிரந்தரத் தீர்வை பெற்றுத்தருமாறு கோரி, போரதீவுப்பற்று பிரதேச  செயலக உத்தியோகஸ்தர்களை பிரதேச செயலக வளாகத்தினுள் உள்நுழையவிடாமல், வாயில் கதவை பூட்டியும் மண்டூர்-மட்டக்களப்பு பிரதான வீதியை வழிமறித்தும் மக்கள் நேற்று திங்கட்கிழமை  மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சுமார் 30 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யானைகளை விரட்டுவதுக்கான நடவடிக்கை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,  நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், உள்ளிட்ட குழுவினர் போரதீவுப்பற்று பிரதேச சபைக் காரியாலயத்தில் கலந்துரையாடினர்.

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்ட இடத்துக்கு வந்த குழுவினர், இந்த மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தனர்.
காட்டு யானைகளின் தாக்குதல்களை தாம் தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாகவும் யானைகளின் தாக்குதல்களினால் உயிரிழப்புகள் ஏற்படுவதுடன்,  சொத்துகளும் சேதமாக்கப்படுவதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில், கிராமங்களினுள் நுழையும் யானைகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை இராணுவத்தினரும் வனவிலங்கு பாதுகாப்புப் பிரிவினரும் ஏற்றுள்ளனர்.

யானைகளைப் பிடிக்கும் அநுராதபுரத்திலுள்ள விசேட குழுவினர் நாளை புதன்கிழமை (07) போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கு வருகைதந்து, யானைகளைப் பிடித்து ஹபரணையிலுள்ள யானைகள் புனர்வாழ்வு மையத்துக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இங்கு கைவிடப்பட்டுள்ள காடுகளை துப்புரவு செய்து, யானைகளின் நடமாட்டத்தை நிரந்தரமாகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், மின்சார வேலி அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென அரசாங்க அதிபர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X