2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் இள வயதுத் திருமணம் அதிகம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பின் கிராமப்புற முஸ்லிம் பிரதேசங்களில் இளவயதுத் திருமணமும் இளவயதுக் கர்ப்பந்தரிப்புகளும் அதிகமாக உள்ளதென, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராசசிங்கம் தெரிவித்தார்.

ஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற இலவச வைத்திய முகாமில் கலந்துகொண்டு, மருத்துவ சேவைகளைப் பெற்ற கர்ப்பிணித் தாய்மார், பெண்கள் மற்றும் யுவதிகள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

தொடர்ந்து அங்கு சகாதார நலன்கள் பற்றி விளக்கமளித்த அவர்,

“கிழக்கு மாகாணத்தில் 12.5 என்ற சதவீதத்தில் இளவயதுத் திருமணம் அதிகமாகி இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

“மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் குறிப்பாக முஸ்லிம் மக்கள் வாழும் பின்தங்கிய கிராமப் புறங்களில் இளவயதுத் திருமண சதவீதம் அதிகமாகவுள்ளதாகவும் அந்த ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.

“19 வயதுக்குள் கர்ப்பம் தரித்தலே இளவயதுத் திருமணம் எனப்படுகின்றது.இந்த இள வயதெல்லையில் திருமணம் செய்தல் என்பது தாய் சேய் மற்றும் சமூக ஆரோக்கியத்துக்குக் கேடானது.

“ஒரு பெண்ணின் ஆரோக்கிய நிலையை எடுத்துக் காட்டுவது உடற் திணிவுச் சுட்டி. அது  18.5 என்ற அளவில் இருக்க வேண்டும். அந்த அளவில் இருந்து அது குறைவடைந்தால் பெண்ணின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கொள்ள முடியும்.

“இளவயதுத் திருமணம் செய்து கொள்ளும் சிறுமிகள் அனைவருக்கும் உடற் திணிவுச் சுட்டி என்பது 18.5 என்ற அளவை விடக் குறைவானதாகவே இருக்கின்றது.

“இளவயதுத் திருமணத்தின் மூலம் குறை மாதத்தில் நிறை குறைந்த பிள்ளைகள்  பிறக்கும். அதனால் அனீமியா எனப்படுகின்ற குருதிச் சோகை நோய் தாய்க்கும் சேய்க்கும் ஏற்படும்.

“பெண்ணுக்கு ஆரோக்கியமான உணவுகள் தேவை, அதேவேளை, அவளது கருவில் வளர்கின்ற வயிற்றுக் குழந்தைக்கும் ஆரோக்கியமான தேவை. பிறக்கும் சாதாரணமான ஒரு குழந்தையின் நிறை 2.5 கிலோகிராம் ஆகும். ஆனால், இளவயதுச் சிறுமிகள் பெற்றெடுக்கும் குழந்தைகள் ஒருபோதும் இந்த நிறையை அடைவதில்லை. இதனால் தாய்க்கும் சேய்க்கும் பாதிப்புகள் அதிகம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X