2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மீனவா்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2018 ஜூலை 26 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம், எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு முன்பாக, புணானை அணைக்கட்டு முள்ளி வட்டவான் வரையறுக்கப்பட்ட ஆமிலா மீனவர் கூட்டுறவுச் சங்க மீனவர்களால், கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று (26) காலை மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி சங்கத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு, வாகனேரி குளத்தில் மீன்பிடிப்பதற்கான அனுமதி, மாவட்ட நீர் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் நிலைய அதிகாரிகளால் மூன்று ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தே, இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச சபையின் மாதாந்த அமர்வு ஆரம்பித்துச் சற்று நேரத்தில், இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

இவ்வாண்டு பெப்ரவரி 2ஆம் திகதியன்று, மட்டக்களப்பு மாவட்ட நீர் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் அதிகாரி ஜேக்கப் நெல்சன் தலைமையிலான குழுவினர், தங்களது 22 தோணிகளைப் பறிமுதல் செய்ததுடன், இதுவரை அவற்றைக் கையளிக்கவில்லை எனவும், மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் அறிவித்தும், தீர்வு கிடைக்கவில்லை என்றும், இதனால் தமது மீனவத் தொழிலை மேற்கொள்ள முடியாததால், தாம் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, தமது கோரிக்கை தொடர்பாக அதிக கவனம் செலுத்தி, உரிய அதிகாரிகள், அமைச்சர்களுடன் தொடர்புகொண்டு, இதற்கான நடவடிக்கைகளை எடுத்து, தீர்வைப் பெற்றுத்தருமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

குறித்த கோரிக்கை அடங்கிய மகஜர், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளரிடமும் சபை உறுப்பினர்களிடமும், மீனவர்களால் கையளிக்கப்பட்டது.

மகஜரைப் பெற்றுக்கொண்ட தவிசாளர் இலவத்தம்பி அம்ஸ்ரின் (அஸ்மி), சபையின் உறுப்பினர்களுடன் இது விடயம் தொடர்பாக கலந்துரையாடி, இதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X