2025 மே 10, சனிக்கிழமை

வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு சுமந்திரனிடம் வேண்டுகோள்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் பேசுவோருக்கு, இலங்கை நிர்வாக சேவை தரம் III போட்டிப் பரீட்சைக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒன்றிய அங்கத்தவர்கள் தெரிவித்தனர்.

இலங்கை நிர்வாக சேவை தரம் III பதவிக்கான போட்டிப் பரீட்சை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் உள்ள திகதியின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் உத்தியேகத்தர்களுக்கான வாய்ப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள், சுமந்திரனிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் சுமந்திரனிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பாக மேலும் சுட்டிக்காட்டிய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒன்றிய அங்கத்தவர்கள்,

இலங்கை நிருவாக சேவைகள் தரம் மூன்று பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு 2018.07.01ம் திகதிக்கு முன்னர் அரச சேவையில் இணைந்து 5 வருடங்கள் பூர்த்தியடைந்தவர்களும் 5 தடவைகள் சம்பள உயர்வுகளைப் பெற்றுள்ளவர்களும் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என்ற தகைமை வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால், 2013ம் வருடத்தில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டதன் அடிப்படையில் சிங்களவர்களுக்கும் வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ள தமிழர்களுக்கும் மேற்சொன்ன  தகைமை ஏற்புடையதாயுள்ளது,

அத்துடன், அவர்களே இப் பரீட்சைக்குத் தோற்றமுடியும்.

ஏனெனில் வடக்கு கிழக்கில் அம்பாறை மாவட்டத்தைத் தவிர்த்து அப்போதைய அரசினால் 2013.07.02, 2013.07.09, 2013.07.14 ஆகிய திகதிகளிலேயே நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந்த அடிப்படையில் 5 வருடங்கள் பூர்த்தி என்பது வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஒரு சிலருக்கு ஒரு நாளும்,  இன்னும் சிலருக்கு 14 நாட்களும் என்ற அடிப்படையில் வித்தியாசப்படுகின்றது.

எனவே இந்த வர்த்தமானியில் குறிப்பிட்ட திகதியில் மாற்றத்தை ஏற்படுத்தாதவிடத்து வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் பேசும் அரச உத்தியோகத்தர் எவருக்கும் இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வாய்ப்புக் கிடைக்காமல் போகும்.' என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்த தெரிவித்த சுமந்திரன் எம்.பி, தான் இந்த விடயம் குறித்து ஏற்கெனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் தான் கவனத்தைச் செலுத்துவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒன்றிய அங்கத்தவர்களிடம் உறுதிளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X