2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

'அடுத்த ஜனாதிபதியாக பிரதமர் ரணில் போட்டியின்றித் தெரிவாவார்'

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

அடுத்துவரும் நான்கு வருடங்களின் பின்னர் அமையவுள்ள புதிய ஆட்சியிலும் தற்போது நடைமுறையிலுள்ள இணைந்த ஆட்சிமுறைமையே பின்பற்றப்படவுள்ளதாகக் கூறியுள்ள ஒன்றிணைந்த எதிரணியின் ஆதரவாளர்கள், 'அடுத்த ஜனாதிபதியாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பிரதமாராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தெரிவு செய்யப்படுவர்' என்றும் கூறினார்.

அதற்கு ஏற்றாற் போலவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் செயலாளர் துமிந்த திசாநாயக்கவும் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினர்.

இதனால், குருநாகலையில் எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள, ஸ்ரீ லங்கா சுதந்திரக்; கட்சியின் 65ஆவது மாநாட்டை, புறக்கணிப்பதற்கு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியினரின் ஆதரவாளரும்  தலவாக்கலை- லிந்துலை நகரசபையின் முன்னாள் தலைவருமான அசோக சேபால தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிணைந்த எதிரணியின் ஆதரவாளர்களுக்கிடையிலான கூட்டம், நுவரெலியா வெடபன் விருந்தகத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது:

'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எமது ஸ்ரீலங்;கா சுதந்திர கட்சியை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இன்று எமது கட்சி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விருப்பத்தின்படியே செயற்படுகின்றது. அதற்கு நாங்கள் ஒத்துழைக்க முடியாது'  என்றார்.
'கட்சிக்காக தமது வாழ்நாளின் பாதியை அர்ப்பணித்துச் செயற்பட்ட நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.பி.ரட்ணாயக்க, அந்தப்  பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.  கட்சியை அழிக்க திட்டமிட்டுள்ளார்கள் என்பது இதன்மூலம் நிரூபணமாகியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் தொகுதி அமைப்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஐந்து பேரில் நான்கு பேர், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள். எனவே, அவர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களாக நியமிப்பதன் நோக்கமென்ன?' என இதன்போது அவர் கேள்வியெழுப்பினார்.

'அடுத்து  நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக எந்தவொரு வேட்பாளரும் நிறுத்தப்படமாட்டர். ரணில் விக்கிரமசிங்க போட்டியின்றி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். மைத்திரிபால சிறிசேன பிரதமராகத் தெரிவு செய்யப்படுவார். இதற்கான ஏற்பாடுகளையே, இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வருகின்றார்' என அவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .