2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

'இளைஞர், யுவதிகள் தனியார்துறை தொழில் வாய்ப்பை தவறவிடக்கூடாது'

Kogilavani   / 2016 ஜூன் 15 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

'இளைஞர், யுவதிகள் அரசாங்க தொழில்துறையை மட்டும் நம்பியிருக்காது, தனியார் துறை தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதிலும் முனைப்புக்காட்ட வேண்டும்' என மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தனியார் தொழிற்பேட்டை ஒன்றில் வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலான கூட்டமொன்று, ஹட்டன் - டிக்கோயா நகரசபை மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை(14) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர், 'நாட்டில் இன்று இலட்சக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில்வாய்ப்பின்றி அவதிப்படுகின்றனர். அதில் அதிகமானவர்கள் தங்களுக்கு அரசாங்க தொழில் வாய்ப்பு மட்டுமே வேண்டும் என்கின்றனர். இன்றைய நிலையில், அரசாங் தொழில் வாய்ப்புகளை   சகலருக்கும் வழங்க கூடிய நிலை  இல்லை.

தற்போது போட்டிப் பரீட்சைகளை அடிப்படையாகக் கொண்டே அரசாங்க நியமனங்களும் வழங்கப்படுகின்றன. போட்டிப் பரீட்சையில் சித்தியடைய தவறும்பட்சத்தில் அவர்களுக்கான நியமனங்களும் கிடைக்காமல் போய்விடுகின்றன' என்றார்.

'தொழிலொன்றுக்காக 18-30 வயதுக்கு உட்பட்டவர்களே தெரிவு செய்யப்படுகின்றனர். சில இடங்களில் 25 வயதுக்கு குறைந்தோர் மாத்திரமே தெரிவு செய்யப்படுகின்றனர். அதற்கான அடிப்படைக் காரணம் ஒருவர்; குறைந்தது 20 வருடங்களாவது தனது சேவையை குறிப்பிட்ட நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்பதாகும். எனவே, தொழில் தேடி காத்திருக்கும் இளைஞர், யுவதிகள் தங்களின் வயதெல்லை அதிகரிக்கும்போது குறிப்பிட்ட தொழில் வாய்ப்புக்களை பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்' என அவர் மேலும் கூறினார்.  

'இளைஞர், யுவதிகள் தங்களுக்கு விருப்பமான தனியார் துறைகளில்; தொழிலை பெற்றுக்கொள்ளும்போது, தங்களது வாழ்க்கையை சீரமைத்துக்கொள்ள முடிகின்றது. அதனைவிட தனியார் துறைகளிலேயே அதிக சம்பளம், ஏனைய விசேட சலுகைகள், பதவி உயர்வுகள், நேர்த்தியான தொழில், வாகன வசதிகள் போன்ற பல்வேறு வரப்பிரசாதங்கள் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன. எனவே, தனியார் துறைகளில் தங்களுக்கேற்ற தொழில்வாய்ப்புக்கள் வருகின்றபோது அதனை பெற்றுக்கொண்டு தங்கள் வாழ்வை வளப்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .