2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

‘எதிர்ப்புகளுக்கு அஞ்சமாட்டேன்’

Kogilavani   / 2017 மே 17 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

க.மகாதேவன்   

“இந்திய பட்டதாரிகளை வரவழைப்பதற்கு, எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் நான் அஞ்சமாட்டேன், அதனை  அமுல்படுத்தியே தீருவேன். இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அனுமதியை வழங்கியுள்ளார்” என்று, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  

“இந்தியா, தெற்குக்கு வழங்கினால் அது சகோதரத்துவம், ஆனால், மலையக தமிழர்களுக்கு வழங்கினால் அது இனவாதம்” என்றும் அவர் கூறினார்.  

புத்தளம் ஆண்டிமுனை ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பாடசாலை, ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயம், உடப்பு தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு, நேற்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அப்பாடசாலைகளில் நிலவிவந்த குறைபாடுகளை கேட்டறிந்துகொண்டார்.  

இதற்கான ஏற்பாடுகளை, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவாவி மற்றும் புத்தளம் மாவட்ட ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் என்.எம்.நஸ்மி ஆகியோர் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.  

இங்கு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு கூறினார். மேலும் கூறிய அவர்,  

“இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைப்பதற்கான நடவடிக்கை எடுக்கின்றபோது, அதனை ஒருசிலர் இனவாத கண்கொண்டு பார்க்கின்றார்கள். இவ்வாறான நலத்திட்டங்களை இனவாத கண்கொண்டு பார்ப்பதை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

எத்தனையோ இந்திய வைத்தியர்கள் இன்று இலங்கையில் பல சத்திர சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவுசெய்து, பல உயிர்களை காப்பாற்றியுள்ளனர். ஆனால், மலையக பாடசாலைகளுக்கு கடமையாற்றுவதற்காக, இந்தியாவிலிருந்து பட்டதாரிகளை வரவழைப்பதை ஒருவரும் விரும்பவில்லை.   

“நான் இன்று ஒரு தமிழ் இராஜாங்க கல்வி அமைச்சராக இருக்கின்ற காரணத்தினால், இலங்கையின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, தமிழ்மொழிமூல பாடசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.  இதேவேளை, மலையகம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் உயர்தரம் பிரிவு உள்ள பாடசாலைகளில் கணித, விஞ்ஞான பிரிவுகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.   

இப்பாடங்களை கற்பிப்பதற்கு போதியளவிலான ஆசிரியர் வளம் இலங்கையில் இல்லாததால், இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்து பட்டம்பெற்ற பட்டதாரிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றேன். ஆனால், ஒருசிலர் இதனை இனவாத கண்கொண்டு பார்க்கின்றனர். மலையகத்திலுள்ள தமிழ் மாணவர்களும் கல்வியில் முன்னேற்றமடைவதை இவ்வாறானவர்கள் விரும்பவில்லையா? என்ற கேள்வியை கேட்க தூண்டுகின்றது.  

எங்களுடைய பிள்ளைகள், கல்வியில் முன்னேற்றமடைந்துவிட்டால், வீட்டுவேலைகள் செய்வதற்கு ஒருவரும் கிடைக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தினாலேயே, இவ்வாறான திட்டங்களுக்கு தடைகள் விதிக்கப்படுகின்றனவா? என கேள்வி கேட்கவிளைகிறேன்” என அவர் கோரினார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .