Kogilavani / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொட்டகலை தமது கோட்டை எனக் கூறி, பலர் அங்கு கோட்டைகளை எழுப்பியுள்ளனர். ஆனால், அந்த கோட்டைகளால் மக்கள் எவ்வித நன்மையையும் பெற்றுக்கொள்ளவில்லை. பெருந்தோட்ட மக்கள் இன்று, கோட்டைகளை கேட்கவில்லை. தனிவீடுகளையே நாடி நிற்கின்றனர்' என தமிழ் முற்போக்கு கூட்டணி கூறியுள்ளது.
'மலையகப் பெருந்தோட்ட மக்களின் அவசியமானதும் அவசரமானதுமான தேவையாக, தனிவீட்டுத்திட்டமே உள்ளது. கொட்டகலை நகருக்குள் உள்நுழையும் இரண்டு பக்கங்களிலும் 'கொட்டகலை தமது அரசியல் கோட்டைகள்' என காட்டும் வளைவுகள் வரவேற்கின்றன. ஆனால், உள்ளே வந்துப் பார்த்தால் மக்கள், ஓட்டை லயங்களிலேயே வாழ்கின்றனர்.
அம்மக்கள் கோட்டைகளைக் கேட்கவில்லை. தமக்கான தனித்துவமான வீட்டையே கேட்டு நிற்கின்றனர்' என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார். கொட்டகலை, ரொசிட்டாத் தோட்டத்தில் அமைக்கப்படவுள்ள 23 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரைத்த அவர்,
'இன்று மலையக மக்கள் தமக்கான தனிவீட்டைக் கோருவதை, ஒரு சமூக கோஷமாக மாற்றியுள்ளார்கள். அவர்கள் தமக்கான தனித்துவத்தை, சுயாதீனத்தை உணர்ந்தவர்களாக மாறிவருகின்றார்கள். யாருடையப் படியிலும், எந்தவொரு கட்சியினதுப் பிடியிலும் தங்கி வாழ அவர்கள் தயாராக இல்லை' என்றார்.
'கொட்டகலை எங்கள் கோட்டை... என நகரத்தில் இருபுறமும் பாதை வளைவுகளை எழுப்பினார்கள். அந்த பாதை வளைவுகளினால் கொட்டகலையில் வாழும் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடைக்கவில்லை. இங்கு கல்விக் கற்கும் மாணவர்கள் எந்த நன்மையையும் பெறவில்லை. அவர்களது கோட்டைக்குள் வாழும் மக்களின் லயத்துக் கூரைகளில் ஓட்டைகளே நிறைந்திருக்கின்றன' என்றார்.
'கொட்டகலையில் இரண்டு நகரங்களுக்கு இடையே, வீதியின் அருகே இருக்கும் லயத்தின் ஓட்டைகளைப் பலரும் பார்த்த வண்ணமே பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அமைச்சர் திகாம்பரம் இன்று அந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளார்.
அதேபோன்று, சிலரது கோட்டையாக கருதப்படும், றம்பொடை - வெவெண்டன் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கும் 58 வீடுகளைப் பெற்றுக்கொடுக்க அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார்' என அவர் சுட்டிக்காட்டினார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .