2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

'கடதாசி துண்டை நீட்டி அழைத்தனர்'

Kogilavani   / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

'நுவரெலியா வசந்த காலத்தையொட்டி நடைபெறுகின்ற மலர்கண்காட்சியில் கலந்துகொள்ளுமாறு கூறி, கடதாசி துண்டை நீட்டினர். என்னை முறையாக அழைக்கவில்லை. எனவே நான், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை' என்று, மத்திய மாகாண ஆளுநர் திருமதி நிலுகா ஏக்கநாயக்க தெரிவித்தார்.

நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் வருடாந்த மலர் கண்காட்சி, நுவரெலியா விக்டோரியா பூங்காவில், இன்று( 18) நடைபெற்றது.

குறித்த நிகழ்வின் அழைப்பிதழில் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் திருமதி.நிலுகா ஏக்கநாயக்க கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அவர் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

இது தொடர்பாக தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

'முக்கியமான நிகழ்வுக்கு ஆளுநரை பிரதம அதிதியாக அழைப்பதாக இருந்தால், அதற்கென ஒரு நடைமுறை இருக்கின்றது. அந்த நடைமுறை மீறப்பட்டுள்ளது. நுவரெலியாவுக்கு நான் சென்றிருந்தபோது நுவரெலியா மாநகர சபையின் பொது சுகாதார அதிகாரி ஒருவர் என்னிடம் ஒரு சிறு கடதாசி துண்டை கொடுத்து மலர் கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஏனோ தானோ என்ற வகையில், முறையற்ற முறையிலேயே, என்னை இந்நிகழ்வுக்கு அழைத்தனர். தனிப்பட்ட ரீதியில், நிலுகாவுக்கு கௌரவம் கொடுக்கவும் என்று நாங்கள் கூறவில்லை.

மத்திய மாகாண ஆளுநர் என்ற முறையில் அழைப்பு விடுக்கப்படும்போது சில நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவை கடைப்பிடிக்கப்படவில்லை. எனவே, நான் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதை தவிர்த்துக் கொண்டேன்” என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .