2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

“கறுப்புக்கொடி காட்ட இடமளியோம்”

Kogilavani   / 2017 மே 07 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

'இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துக்கு எதிராக சிலர் கறுப்புக்கொடிகளை காட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக, செய்தி வெளியாகியுள்ளன. இதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்கப் போவதில்லை' என்று, மத்திய மாகாண சபையின் உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான ஆர்.ராஜாராம் தெரிவித்துள்ளார்.

'இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு, இலங்கையில் நடந்த கசப்பான சம்பவம் இன்னும் எமது மனதைவிட்டு விலகவில்லை' என்றும் அவர் கூறினார்.

இலங்கைக்கு எதிர்வரும் வியாழக்கிழமை (11) விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையை உத்தியோகப்பூர்வமாக வெள்ளிக்கிழமை திறந்து வைக்கவுள்ளார்.

இந்தியப் பிரதமரின் மலையக விஜயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் கூட்டம், மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், நுவரெலியா, நானுஒயா, இராகலை மற்றும் உடப்புஸ்ஸலாவை ஆகியப் பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,

'இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். நல்லாட்சி அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அவர், சர்வதேச வெசாக் தினத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதேவேளை, மலையகத்தில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளியினரையும் சந்திக்கவுள்ளார். இது அவருடைய பெருந்தன்மையாகும்.

எனவே, அவருடைய வருகையானது தனிப்பட்ட ஒரு மலையக கட்சிக்கு உரித்தானது அல்ல. அது எல்லோருக்கும் பொதுவானது. எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அவரை வரவேற்க வேண்டும்.

இந்தியாவின் முன்னாள் பிரதர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகிய இருவருமே, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கான நிதியை வழங்கியதாக ஒருசிலர் கூறுகின்றனர். இவ்விருவரும், தமது சொந்த நிதியை, கிளங்கன் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு வழங்கவில்லை. இந்திய அரசாங்கத்தின் நிதியையே, கிளங்கன் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு வழங்கியுள்ளார்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, கடந்த காலங்களில் நடந்த விடயங்களை விட்டுவிட்டு, நடைமுறையில் என்ன நடக்கின்றதோ அதனை உணர்ந்து செயற்பட வேண்டும். எனவே, மோடியின் வருகை ஒரு சரித்திரமாகவும் அது எமது மக்களுக்கு காத்திரமாகவும் அமைய வேண்டும் என்பதையே, நாம் எதிர்பார்க்கின்றோம்' என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .