2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

'கல்விக்கான அபிவிருத்தித் திட்டங்களை ஊவா, மத்திய மாகாணங்கள் புறக்கணிக்கின்றன'

George   / 2016 ஜூன் 01 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

'என்னை பழிவாங்குவதாக நினைத்து, மாணவரின் கல்வி முன்னேற்றத்துக்காக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை ஊவா, மத்திய மாகாணங்கள் புறக்கணித்து வருகின்றன' என இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

'நல்லாட்சி அரசாங்கத்தில் கல்வி அமைச்சு, அதனுடைய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மாகாண சபைகளுடன் இணைந்து செயற்படுத்துவதற்கே உத்தேசித்துள்ளது. அதனடிப்படையிலேயே நாங்கள் கல்வி அமைச்சு என்ற வகையில் செயற்பட்டு வருகின்றோம். ஆனால், ஒரு சில மாகாண சபைகள் அந்த நிலையில் இல்லை. குறிப்பாக மத்திய மாகாண சபையிலும் ஊவா மாகாண சபையிலும் இந்த நிலைமை தொடர்கின்றது' எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

'அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' எனும் வேலைத்திட்டத்தின் கீழ், ஊவா மாகாணத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள பாடசாலைகளுக்கான ஆரம்பக்கட்ட நிதியாக 345 மில்லியன் ரூபாய்க்கான காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.  இங்கு மேலும் கூறிய அவர்,  
'ஊவாவிலும் மத்திய மாகாணத்திலும் உள்ள சில அமைச்சர்கள், என்னை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு மாணவரின் கல்விக்கு குழி தோண்டுகின்றனர். இராதாகிருஸ்ணனுக்கும் அவருடைய வேலைத்திட்டங்களுக்கும் இடைஞ்சல் ஏற்படுத்துவதாக நினைத்து, மாணவரை பழிவாங்க வேண்டாம்.  அரசியலையும் அபிவிருத்தியையும் தனித்தனியாக பிரித்து செயற்படுத்துங்கள்' என்றார்.

'அண்மையில்   ஊவாவுக்கு வழங்கிய ஆசிரியர் உதவியாளர்களை திருப்பி அனுப்பி இருக்கின்றார்கள். அதனால், எனக்கு எந்தவிதமான நட்டமும் ஏற்படப்போவதில்லை. மாணவரே முழுமையான நட்டத்தை எதிர்கொள்ளப் போகின்றனர்' என சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .