2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நுவரெலியா மாவட்டத்தில் உட்கட்சி மோதல்கள் அதிகரித்துள்ளன: கஃபே

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 11 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

வடக்கில் உள்ள ஆளுநர் தேர்தல் பிரசாரங்களில் அரசாங்கத்தின் சார்பாக ஈடுபட்டுவருகின்றார் இது மிகவும் பிழையானதும் தேர்தல் சட்டங்களுக்கு முரணானதுமான செயல்பாடாகும். நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தவரையில் ஓரணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கிடையே உட்கட்சி மோதல்கள் அதிகரித்துள்ளன என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் டினைன் விருந்தகத்தில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தினால் இன்று  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

இந்த தேர்தல் மத்திய மாகாணத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.பிரதேச வாரியாக சிறந்த மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதே இந்த தேர்தலாகும். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தபின்பு மிகவும் உக்கிரமான ஒரு நிலை இங்கு காணப்பட்டது.ஒரே கட்சியின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் முறுகல் நிலை ஏற்பட்டதை காணக்கூடியதாகவுள்ளது.

இது வரை கணக்கிடப்பட்டுள்ள 36 மோதல் சம்பவங்களில் அநேகமானவை உட்கட்சி பூசலாகவே காணப்படுகின்றது.அதில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய சம்பவம் அல்லது தொடர்ச்சியாக சம்பவம் என்று பார்த்தால் அது கொட்டகலை பகுதியில் இடம் பெற்ற சம்பவத்தை குறிப்பிடலாம்.

இது தொடர்ந்து சென்ற ஒரு சம்பவமாகவே பதிவாகின்றது.ஹட்டன்,அக்கரபத்தனை,பொகவந்தலாவை,லிந்துலை போன்ற பகுதிகளில் இதன் தாக்கம் காணப்பட்டமை உணர முடிந்தது.

குறித்த இந்த பகுதிகளில் இந்த சம்பவத்தின் எதிரொலிகள் அதிகமாக பேசப்பட்டது.பெருந்தோட்ட பகுதிகளில் தற்பொழுது மறைக்கப்பட்ட சம்பவங்களே அதிகம் நடைபெறுகின்றன. இது கீழ் மற்றும் மேல் ஆகிய இரு மட்டங்களிலும் நடைபெறுகின்றன.

மட்டத்திலும் மேல்மட்டத்திலும் நடைபெறுகின்றது. நாம் கடந்த தேர்தல்களில் பார்த்துள்ளோம் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் ஆதரவாளர்களும் சண்டையிடுவதை காண முடிந்தது.

ஆனால் தற்பொழுது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.இவ்வாறான சம்பவங்கள் பொலிஸ் புத்தகங்களில் எழுதப்படுவதில்லை. கீழ் மட்டத்தில் இவை நடைபெறுகின்றன. காரியாலயங்களிலும்  தோட்டங்களிலும் வேலை செய்கின்ற இடங்களிலும் இந்த சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.இது மிகவும் கவலைக்குறிய சம்பவமாகும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்குள் வேட்பாளர்கள் மத்தியில் ஏற்படும் மோதல்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு பொலிஸ் திணைக்களத்தால் முடியாமல் போயுள்ளது.அரசியல்வாதிகளின் செயல்பாடுகளால் பொலிசாருக்கு சுதந்திரமாக தமது கடமைகளை முன்னெடுக்கவும் விசாரணைகளை நடத்தவும் முடியாமல் போயுள்ளது.

இது நுவரெலியா மாவட்டத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை மாத்தளை பகுதியிலும் இதே நிலைமை தான் உள்ளது.அங்கும் இவ்வாறான மோதல்களே அதிகம் காணப்படுகின்றது.இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்யவோ இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவோ முடியாமல் போயுள்ளது.பொலிசார் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் துவக்குகளை தொடர்ந்தும் பாவித்த சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன.இவர்கள் தொடர்பாக இதுவரை உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.தேர்தல் சட்டங்கள் மாத்திரம் அல்ல பொதுவான நடைமுறையில் உள்ள சட்டங்கள் கூட அனைவருக்கும் ஓரே மாதிரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

சட்டம் எல்லோருக்கும் பொதுவாக நடைமுறைபடுத்தப்படுமானால் தேர்தல் வன்முறைகள் குறைவடைவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது.சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமையால் வன்முறைக்கு பதில் வன்முறை என்ற நிலையை நாம் கடந்த பல தேர்தல்களிலும் அவதானித்துள்ளோம்.நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தவரை பிரதான நான்கு தொழிற்சங்களை மையப்படுத்தியே இந்த சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

பெருந்தோட்ட பகுதிகளில் அச்சுறுத்தல் சம்பவங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன.இதன் மூலமாக பெருந்தோட்டங்களிலுள்ள தொழிற்சங்கங்களை சார்ந்தவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் மிகவும் பயந்த நிலையில் உள்ளனர்.இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஜனநாயக ரீதியான தேர்தல் என்ற சொற்பதம் அர்த்தமற்றதாகிவிடும்.

நுவரெலியா மாவட்டத்தில் அதிக அளவில் அரச சொத்துக்கள் பாவிக்கப்படுகின்றன.அரச கட்டிடங்கள் பாவிக்கப்படுகின்றன.பயணிகள் போக்குவரத்திற்கு சொந்தமாக அதிகளவிலான சொத்துக்கள் பாவிக்கப்படுகின்றன.இந்த அமைச்சின் வாகனங்கள் பாவிக்கப்படுகின்றன.சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்ச்சியாக தேர்தல் பிரசாரங்களுக்காகவும் போஸ்டர்கள் ஒட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றனர்.விசேடமாக அம்பேகமுவ பகுதியில் இது அதிகமாக இடம்பெறுகின்றது.சமுர்த்தி பயனாளிகள் பயன்படுத்தப்படுகின்றனர்.

அதிபர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அச்சுறுத்தப்படுவதோடு அவர்களை கூட்டங்களை ஏற்பாடு செய்யுமாறும் பணிக்கப்படுகின்றனர் அச்சுறுத்தப்படுகின்றனர்.இதனை எந்த காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது.தேர்தல்கள்; ஆணையாளர் இது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்தாலும் அவை நடைமுறை படுத்தப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.

வடக்கில் கிளநொச்சி,முல்லைத்தீவு,வவுனியா,மன்னார் போன்ற மாவட்டங்களில் மிகவும் அமைதியான முறையில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கு காரணம் சட்டம் அனைவருக்கு ஒரே மாதிரியாக நடைமுறைபடுத்தப்படுகின்றமையாகும்.யாழ்ப்பானத்தில் ஒரு சில அசம்பாவிதங்கள் இடம்பெற்றன.துப்பாக்கிபிரயோகங்கள் இடம்பெற்றன அவை தற்பொழுது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு தற்பொழுது சுமுகமான ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.அரச சொத்துக்களை அரசாங்கம் மாத்திரமன்றி தமிழ் தேசிய கூட்மைப்பின் கீழ் இயங்கும் கரச்சி பிரதேச சபைக்கு சொந்தமான வாகனங்களும் தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X