2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

‘மோடியின் வருகையில் அரை வேக்காடுகளின் அரசியல் வேகாது’

Gavitha   / 2017 மே 08 , பி.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின், மலையகத்துக்கான விஜயத்தை வைத்துக்கொண்டு சிலர் அரசியல் இலாபம் தேடுதவற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அவ்வாறான, அரை வேக்காடுகளின் அரசியல், மோடியின் வருகையைத் தடுக்காது” என்று, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

நோர்வூட் பொது மைதானத்தில், மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு வருகைதரும் காங்கிரஸின் ஆதரவாளர்கள், மைதானத்துக்குள் எவ்வழியாக நுழைய வேண்டும். எவ்விடத்தில் அமரவேண்டும். எவ்வழியாக வெளியேறவேண்டும் என்பது தொடர்பில், ஆராய்வதற்காகச் சென்றிருந்தமை ஒன்றும் தப்பில்லை என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.  

நோர்வூட் நகரில், அமைச்சர் திகாம்பரத்துக்கும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பில், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை, கொட்டகலை, காங்கிரஸ் தொழில்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நேற்று (08) நடத்தியது.  

இதில், காங்கிரஸின் உப-தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வெள்ளையன் தினேஸ் நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சதாசிவம், இளைஞர் அணித்தலைவர் ராஜமணி பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர். 

அங்கு, கணபதி கனகராஜ் கருத்து தெரிவிக்கையில்,  

“இலங்கைக்கு விஜயம் ​செய்யவிருக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தின் போது, முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள் தொடர்பில், மக்கள் பிரதிநிதிகள் ஆகிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிந்திருக்க வேண்​டியது அவசியமாகும். அதனால் தான் நோர்வூட் மைதானத்​துக்கு நாங்கள் ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தோம்.  

நோர்வூட் மைதானத்தை பார்வையிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போது, அமைச்சர் திகாம்பரத்தின் வாகனத் தொட​ரணி, நோர்வூட் நகரை வந்தடைந்தது. 

சுமார் 15 க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையாக வந்தன. அதிலொரு, அதாவது, அமைச்சர் திகாம்பரம் பயணித்த வாகனத்துக்கு பின்னால் வந்த வாகனம், ஊவா மாகாண அமைச்சர் தொண்டமானின் வாகனத்துக்கு குறுக்காக நின்றது. 

அதிலிருந்து, 10 அல்லது 15 பேர் திமுதிமுவென இறங்கினர். அவர்கள், வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.  

நாங்கள், வாய்த்தர்க்கத்துக்குச் செல்லவில்லை. பிரச்சினை எதுவாக இருந்தாலும் சமரசம் பேசித் தீர்த்துகொள்ளவே முயன்றோம்.  

நோர்வூட் நகரத்தில் உள்ள பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றமையால், அங்கிருந்தவர்கள் பலரும், நடப்பதை வேடிக்கைபார்த்துக்​ கொண்டிருந்தனர்.  

மோடியின், விஜயத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான உரிமை எங்களுக்கும் உண்டு. இது கட்சியொன்றினால் ஏற்பாடு செய்யும் நிகழ்வல்ல. இரு நாடுகளுக்கிடையிலான நிகழ்வுகள் ஆகும். 

ஆதலால் இங்கு கட்சி பேதம் இன்றி, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதைவிடுத்து, இவ்வாறான சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவது சிறந்தது அல்ல” என்றார். 

“அமைச்சர் திகாம்பரம் நடந்துகொண்ட விடயம் கண்டிக்கத்தக்கது. அமைச்சரொருவர் அவ்வாறு நடந்துகொண்டிருக்க வேண்டியதில்லை. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நோர்வூட் மைதானத்தில் பங்குப்பெற்றவுள்ள நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அங்கத்தவர்களில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். 

அவர்களுக்கு வேண்டிய போக்குவரத்து வசதி, வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி என்பன நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதில்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாவட்ட தலைவர்கள், தலைவிகள், வாலிப சங்க அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளனர். அவர்கள், மைதானத்துக்குள் செல்வது மற்றும் வெளியேறுவது உள்ளிட்ட ஏற்பாடுகளை பார்வையிடுவதற்கே, நாம், அங்கு சென்றோம் என்றும் தெரிவித்தார். 

எனினும், டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மத்திய மாகாண முதலைமைச்சர் சரத் ஏக்கநாயவிடம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. அவருடைய இணைந்தே,
இ.தொ.கா, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகிறது.  

நோர்வூட் மைதானத்தில் இடம்பெறவுள்ள பொது கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தமிழ் முற்போக்குக் கூட்டணி, மேற்கொண்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .