Kogilavani / 2016 மே 11 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அரசாங்கத்தினால் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களில் நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. தொழிற்சங்கங்கள் உருவாக காரணமாகிய கண்டி மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றது' என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சாடியுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் 4,000வீடுகள் அமைக்கும் திட்டத்தில் கண்டி மாவட்ட பெருந்தோட்ட மக்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவர் எஸ்.அருள்சாமி தெரிவித்தார்.
இ.தொ.கா.வின் தலைமைக் காரியாலயமான சௌமிய பவனில் நடைபெற்ற தோட்டத் தலைவர்கள், புத்தி ஜீவிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர், 'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கும் குறிப்பாக இயற்கை அனர்த்தங்களினால் வீடுகளை இழந்த மக்களுக்குமே இந்திய வீட்டுத்திட்டம் முன்னுரிமை வழங்குகின்றது. மேலும்;, இத்திட்டமானது முழு மலையகத்துக்கும் சென்றடையும் வகையில் அமைந்திருத்தல் வேண்டும்.
ஆனால், கண்டி மாவட்ட மக்கள் இந்திய வீட்டுத் திட்டத்தில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 10,15 வருடங்களுக்கு பின்னர் நாடாளுமன்ற உறுப்பினரொருவரை அம்மாவட்ட மக்கள் மிகச் சிரமத்தின் மத்தியில் தெரிவு செய்திருப்பது மலையக வரலாற்றில் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
கண்டி மாவட்டத்தில் நகரங்களிலும், பெருந்தோட்டங்களிலும் ஒட்டுமொத்தமாக இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில்; தமிழ் வாக்காளர்கள் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் உள்ளனர். இந்த மாவட்டத்திலேயே முன்னூறு பெருந்தோட்டங்கள் அமைந்திருக்கின்றன.
இவற்றில் மக்கள் தோட்ட அபிவிருத்திச்சபையும் அரச பெருந்தோட்ட யாக்கங்களுமே அதிகம் என்றாலும் இத்தோட்டங்களில் குடியிருப்பவர்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு நூறு வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட லயன் அறைகள் இன்று கூரைகள் இல்லாத வீடுகளாக காட்சியளிக்கின்றன. இத்தகைய இடங்களில்தான் வீடமைப்புத் திட்டத்துக்கு முதலிடம் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் பெருவாரியாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நுவரெலியா, பதுளை மாவட்டங்களுக்கே வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது முறையற்றது' என்றார்.
'இம்மாவட்டங்களிலேயே அதிகளவு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு சூழ்நிலையில், கண்டி மாவட்டத்தை புறக்கணித்துவிட்டு வீடமைப்புத் திட்டங்களை மேற்படி மாவட்டங்களில் முன்னெடுப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
மலையக தொழிற்சங்க வரலாற்றில் பல்வேறு போராட்டங்கள் கண்டி மாவட்டத்திலேயே நடைபெற்றிருக்கின்றன. தொழிற்சங்க உருவாக்கத்துக்கும் அப்பிரதேசம்தான் காரணமாக இருந்தது. இவ்வாறானதொரு நிலைமையில் வீடமைப்பு திட்டத்துக்கான அமைச்சர் இவற்றையெல்லாம் மூடி மறைத்திருப்பது இந்த மக்களை உயிரோடு குழிதோண்டி புதைப்பதற்கு சமமாகும்' என்றார்.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago