2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

‘அரசாங்கத்தால் பழிவாங்கப்படும் முஸ்லிம் சமூகம்’

Gavitha   / 2020 நவம்பர் 04 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக மட்டும், முஸ்லிம் அரசியல்வாதிகளை வளைத்துப்போடும் கோட்டாபய அரசாங்கம், இன்னும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளைக் கைவிடவில்லை என, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக, அவர் இன்று (04) விடுத்துள்ள அறிக்கையில், சிறுபான்மையின மக்களை அடக்கி ஒடுக்கி, அவர்கள் தொடர்பில் பெரும்பான்மையின மக்கள் மத்தியில், இனவாதத்தை விதைத்து, தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், தொடர்ந்தும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடித்துவருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

கொரோனா வைரஸ் நெருக்கடியின்போது கூட, இனவாதத்தையும் குறுகிய அரசியல் நோக்கங்களையும் ஆட்சியாளர்கள் கைவிடுவதாக இல்லை என்றும் உலகிலுள்ள மற்றயை நாடுகளில், ஒரே சமூகமாக இணைந்து இந்தச் சவாலுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில், இலங்கையில் மாத்திரம் சமூகங்கள் பிரிக்கப்பட்டு, பழிவாங்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“கொரோனா வைரஸின் முதலாவது அலையின்போது, முஸ்லிம் மக்களே வைரஸைப் பரப்புகின்றனர் என்ற விம்பம் உருவாக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. பலவந்தமாக சடலங்கள் எரிக்கப்பட்டன. திடீரென உயிரிழந்தவர்களின் சடலங்கள்கூட, கொரோனா வைரஸ் சந்தேகத்தில் எரிக்கப்பட்டன. இது முஸ்லிம் மக்களின் மத விவகாரங்களுக்கு முரணானச் செயலாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் உயிரிழந்தால், அவரின் சடலத்தை அடக்கம் செய்யலாம், இல்லாவிட்டால் எரிக்கலாம் என்ற இரண்டு நடைமுறைகளையும், உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளதைக் குறிப்பிட்டுள்ள அவர், விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுகளின் பின்னரே, இந்த யோசனை முன்வைக்கப்பட்டது என்றும் ஆனால் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையைக்கூட கருத்திற்கொள்ளாமல், முஸ்லிம் மக்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக, சடலங்களை இந்த அரசாங்கம் தொடர்ந்து எரித்துவருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

“தேர்தல் காலத்தில், ராஜபக்ஷக்களாலும் அவர்களின் சகாக்களாலும் கொடூரமானவர்கள் எனச் சித்தரிக்கப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளிடம், 20ஐ நிறைவேற்றுவதற்கு உதவிபெற்றுள்ளனர். அதாவது அரசியலுக்காக தாங்கள் எதையும் செய்வோம் என்ற செய்தி, இதன்மூலம் வழங்கப்பட்டுள்ளது.

“மறுபுறத்தில் சமூகத்தை வதைக்கும் இந்த அரசாங்கத்துக்கு, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேசக்கரம் நீட்டியமை வேதனையளிக்கின்றது. குறைந்தபட்சம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் மரணித்தால்கூட, அவரின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான அனுமதியை பெற்றுக்கொடுத்திருக்கலாம். அதனை செய்யாமல், ஆதரவு வழங்கிவிட்டு தொடர்ந்தும் கையேந்தும் நிலைமை காணப்படுகின்றது.

“எனவே, முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கை, பண்பாடுகளுக்கு மதிப்பளித்து, உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகைளையும் கருத்திற்கொண்டு சடலங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியும் வழங்கப்படவேண்டும்” என்று அவர் அந்த அறிக்கையில் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .