2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இந்திய வீட்டுத்திட்டத்தில் 'கண்டி புறக்கணிப்புக்கு இ.தொ.காவே காரணம்'

Kogilavani   / 2016 மே 23 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய வீடமைப்புத் திட்டத்தில் பதுளை மற்றும் நுவரேலியா தவிர்ந்து ஏனைய மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டமைக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செயற்பாடே பிரதான காரணியாகும் என தமிழ் முற்போக்குக் கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில்,

அக்கூட்டணியின் பிரதிச் செயலாளர் சண். பிரபாகரன் விடுத்துள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார், தன் மாவட்ட அபிவிருத்தி சம்பந்தமாக கொண்டிருக்கின்ற நிலைப்பாடு, தன் மக்கள் மீதிருக்கின்ற அபிப்பிராயம் மற்றும் அதிக சேவைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை ஆகியன அனைத்தும் மெச்சத்தக்கவை.

மிக நீண்ட இடைவேளைக்குப் பின்னர் பெறப்பட்டிருக்கின்ற பிரதிநிதித்துவம் மூலம், சடுதியாகச் சேவைகளை பெற்றுக்கொள்ள, கண்டி மாவட்ட தமிழ் மக்கள் முற்படுகின்றமை தவறில்லை.

தமிழ் முற்போக்குக் கூட்டணியானது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இருக்கின்ற அனைத்துத் தமிழர்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்றது. ஆகவே, அனைத்து மாவட்ட மக்களின் தேவைகளையும் அறிந்து செயற்படவேண்டியது எமது தேவையாகும். இந்திய வீடமைப்புத் திட்டத்தில் பதுளை, நுவரேலியா தவிர்ந்து ஏனைய மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டமைக்கு பிரதான காரணம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயற்பாடேயாகும்.

எனினும், தன் மாவட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் வேலுகுமார் கொண்டிருந்த நிலைப்பாடை த.மு.கூ மதிக்கின்றது. மேலும், அவர் மே தினத்துக்கு வர மறுத்தமையையும் நாம் ஏற்றுக்கொண்டோம். ஆகவே, எந்த அழுத்தங்களும் கொடுக்கப்படாது, அவரின் ஜனநாயகத் தன்மையும் கருத்துச் சுதந்திரமும் மதிக்கப்படுகின்றது.

கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் முகமாக இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று, தமிழ் முற்போக்குக் கூட்டணி, பேச்சாளர் ஒருவரையும் நியமித்திருக்கின்றது. ஆகவே கருத்துச் சுதந்திரத்துக்குக் கூட்டணிக்குள் எந்தத் தடையும் இல்லை என்பதைப் பொறுப்புடன் கூறிவைக்க விரும்புகின்றேன்' என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .