2025 ஜூலை 19, சனிக்கிழமை

எல்லை மீள்நிர்ணய விடயத்தில் ’அமரர் சந்திரசேகரனின் கனவு நனவாகியது’

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

'நுவரெலியா மாவட்ட எல்லை மீள்நிர்ணயம் தொடர்பாக, மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரன் கண்ட கனவை, தமிழ் முற்போக்குக் கூட்டணி, இன்று நனவாக்கியுள்ளது. இது, கூட்டணியின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றியாகும்' என்று, கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஷ்;ணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'1989ஆம் ஆண்டு நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் இதனை ஒரு பிரகடனமாக மலையக மக்கள் முன்னணி முன்மொழிந்துள்ளது. அதன்பின்பு, பல்வேறு இடங்களிலும் மலையகத்திலும் இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவிக்குழுவிலும் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அன்று பெரியசாமி சந்திரசேகரன் மாத்திரமே இந்த விடயங்கள் தொடர்பாக தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுத்து வந்தார். எனினும் அவரது முயற்சி வெற்றிபெறாமல் போய்விட்டது.

ஆனால் இன்று, தமிழ் முற்போக்குக் கூட்டணி ஒற்றுமையாக அதாவது அமைச்சர்களான பழனி திகாம்பரம், மனோ கணேசன், நான் மேலும் எங்களுடைய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான   எம்.திலகராஜ், வேலுகுமார்  அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டமை காரணமாக, இந்த எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான விடயம், சாதகமான  நிலையை எட்டியுள்ளது.

மலையக அரசியல் வரலாற்றில், மலையக மக்களுக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகவே இதனைக் கருத வேண்டும். எத்தனை அபிவிருத்திகள் வந்தாலும் இந்த வெற்றிக்கு அந்த அபிவிருத்திகள்  ஈடாகாது. எதிர்வரும் தேர்தலில், எமது மலையக மக்களின் உள்ளுராட்சி நிறுவனங்களில் அங்கத்துவம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலமாக, எமது அபிவிருத்தி அதிகரிக்கப்படும்.

எல்லை மீள் நிர்ணயம் தொடர்பாக பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருந்து வந்தது. மலையக கட்சிகளுக்குள் இதற்கான ஒரு முறையான கருத்து கடந்த காலங்களில் முன்வைக்கப்படவில்லை. ஆனால், தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற வகையில் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கருத்துக்களை முன்வைத்த போது, அரசாங்கத்தால் அதனை தட்டிக்களிக்க முடியவில்லை. அதனால் அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X