2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

ஐ.தே.கா இருக்கும் வரை சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லை

Sudharshini   / 2016 பெப்ரவரி 07 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் இருக்கும் வரையிலும், இந்நாட்டில் வாழும் சிறுபான்மை இன மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில், சனிக்கிழமை (06) இடம்பெற்ற வைபவம்மொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார். அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

'இன்று இருப்பது ஒரு புதிய அரசியல் கலாசாரமாகும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதியாகவும்  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமராகவும் இருக்கின்றனர். இது ஒரு புதிய திருப்புமுனையாகும். நாட்டிலுள்ள இரு பிரதான கட்சிகளும் ஒன்று சேர்ந்ததன் மூலம், எமது நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க முடியும்.

முப்பது வருட கால யுத்தம் இந்நாட்டில் நிகழ்ந்தது. 1950 களில் இருந்த தலைவர்கள் இன்று போல் ஒன்று சேர்ந்து இத்தேசிய பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருந்தால், நாம் 30 வருட யுத்தத்துக்கு முகங்கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

அரசியல் அதிகாரத்தை பெறுவதற்காக இனவாதத்தைத் தோற்றுவித்து அரசியல் செய்ததன் விளைவே இதுவாகும்.

ஐக்கிய தேசியக் கட்சி ஏதேனும் ஒரு தீர்வை முன்வைத்தால் அதனை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏதேனும் ஒரு தீர்வை முன்வைத்தால் அதனை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பதுமாக இருந்தது. இதனால் முறையான தீர்வை பெற்றுக்கொள்ளமுடியாது போனது.

முப்பது வருட கால யுத்தம் முடிவடைந்திருந்தாலும் அப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று இன்னும் வழங்கப்படவில்லை. புதியதொரு அரசியல் யாப்பை உருவாக்கி அதன் மூலம் அனைத்து மக்களும் ஒன்றாக வாழக்கூடிய ஒரு புதிய நாட்டை கட்டியெழுப்புவதே எங்கள் நோக்கமாகும். இனி ஒரு போதும் நாட்டில் இன, மத பேதங்கள் ஏற்படக் கூடாது' என்றார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .