2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

கண்டி நகரை அபிவிருத்தி செய்வதற்கான செயற்றிட்டத்தை தயாரிக்கவும்: ஹக்கீம்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பான் வழங்கும் ஒரு பில்லியன் டொலர் நிதியுதவியுடன் கண்டி நகரை அபிவிருத்தி செய்வதற்கு முழுமையான செயல்திட்டமொன்றை துரிதமாகத் தயாரிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

நிதியுதவியை வழங்க முன்வந்துள்ள ஜப்பானிய உயர்மட்டக்குழு எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி இலங்கை வரவுள்ளதால் அதற்கு முன்னர் உரிய செயல்திட்டத்தை தயாரித்து முடிக்குமாறும் அதிகாரிகளிடம் அமைச்சர் ஹக்கீம் வலியுறுத்தினார்.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சில், கண்டி நகர அபிவிருத்தி தொடர்பான பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் வெள்ளிக்ழமை (11) நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அண்மையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைச்சர் ஹக்கீம் ஏற்பாடு செய்திருந்த, அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, லக்ஷ்மன் கிரியல்ல, எம்.எச்.ஏ.ஹலீம், சரத் அமுனுகம மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அவற்றின் உயரதிகாரிகள் பங்குபற்றிய ஆரம்பக் கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் அமைச்சில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கண்டி நகர போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகள், மாற்று வீதிகளை அமைத்தல், யுனொஸ்கோவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மரபுரிமை நகரான கண்டியில் வசதி குறைந்த சேரி வாழ் மக்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளல் மற்றும் கலையம்சம் பொருந்திய தபால் நிலையக் கட்டடத்தை சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஒத்துழைப்புடன் நவீன மயப்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் இக்கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டன.

அமைச்சின் செயலாளர் பீ.எம்.யூ.டீ. பஸ்நாயக்க, செயல்திட்ட செயலாளர் என்.டீ.ஹெட்டிஆராச்சி மற்றும்  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, விவசாயத் திணைக்களம், கண்டி மாநகர சபை ஆகியவற்றின் உயரதிகாரிகள் உட்பட பலர் இதில் பங்குபற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .