2025 மே 19, திங்கட்கிழமை

கோதுமை மா தட்டுபாட்டால் பெரும் பாதிப்பு

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 05 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

இலங்கையில் கோதுமை மாவை விநியோகிக்கும் பிரதான இரண்டு நிறுவனங்களுக்கும் தேவையான கோதுமை மா தொகை போதுமான அளவு கிடைக்காமை காரணமாக தனியார்  வர்த்தக நிலையங்களில் இருந்து அதிக விலைக்கு கோதுமை மாவை கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் 450 கிராம் பாண் உள்ளிட்ட ஏனைய உற்பத்தி பொருள்களின் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தையில் 50 கிலோகிராம் நிறையுடைய கோதுமை மா 18,000 ரூபாய் தொடக்கம் 20,000 ரூபாய் வரையான அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குறித்த வர்த்தகர்கள் தொகையாக கோதுமை மாவை சேகரித்து, சந்தையில் தட்டுபாடு நிலவும் நேரங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோதுமை மாவுக்குக் கட்டுப்பாட்டு விலை இல்லாத காரணத்தால் மொத்த வியாபாரிகள் கோதுமைமாவை வெவ்வேறு விலைக்கு விற்பதால் 450 கிராம் பாண், 300-320 ரூபாய்க்கும், ஒரு பணிஸ் 110 ரூபாய்க்கும் விற்க நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் அதிகளவான மக்கள் பேக்கரி தொழிலில் ஈடுபட்டுள்ள போதிலும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மற்றும் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக, பலர் அத்தொழிலை விட்டு விலகியுள்ளதாக, ஹட்டன் நகர பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பசீர் மெஹமட் தெரிவித்தார்.

இதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாயாக காணப்படும் அதேவேளை, அந்த சம்பளத்தில் ஒரு கிலோ கோதுமை மாவோ, பாணையோ  வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தேயிலைத் தோட்டங்களில் தொழில் செய்யும் தாம், பாண், கோதுமை மாவு உள்ளிட்ட உணவுகளை இரண்டு வேளை உண்பதாகவும், தமது மக்கள் நீண்ட காலமாக கோதுமை மாவைச் சார்ந்த உணவிற்குப் பழகியுள்ளதுடன் அது தமக்கு சமைப்பதற்கு வசதியாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில்,கோதுமை மாவின் விலை அதிகமாக இருந்தாலும் சந்தையில் கொள்வனவு செய்ய முடியாது என தெரிவிக்கும் தோட்டத் தொழிலாளர்கள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மூன்று வேளையும் சோறு சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

எனவே பெருந்தோட்ட மக்களுக்கு அரசாங்கம் கோதுமை மா மானியத்தை வழங்க வேண்டுமென தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X