Kogilavani / 2016 மே 18 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகத்தில் நீடித்துவரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு
தொடர் மழை காரணமாக மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் வீடுகள் பல முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
கம்பளை, அம்புலுவாவ பகுதியில் நேற்று(17) ஏற்பட்ட மண்சரிவினால் இரு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் அவ்வீடுகளில் வசித்து வந்த குடும்பங்கள்; வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
நுவரெலியா, சாந்திபுர பகுதியில் நேற்று(17) வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் அவ்வீடு முற்றாக சேதமடைந்துள்ளது. இதேவேளை, ஹட்டன், ரொத்தஸ் பகுதியில் குடியிருப்பொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் அவ்வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன் எவ்விதமான உயிராபத்துக்களும் ஏற்படவில்லை.
வட்டவளை, ஆடை தொழிற்சாலைக்கு பின்புறம் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு மதில், நிலம் தாழிறங்கியதால் இடிந்து விழுந்துள்ளது. நேற்று(17) நண்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 100 அடி நீளமான மதிலே திடீரென சரிந்து விழுந்துள்ளது. இதனால், எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன், நுவரெலியா, கண்டி, கம்பளை, புபுரஸ்ஸ, புசல்லாவை, நாவலப்பிட்டி பிரதான வீதிகளில் பல இடங்களிலும் மண்திட்டுக்கள் சரிந்து விழுந்துள்ளதால் இவ்வீதிகள் வழியான போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
வெளியேற்றம்
மண்சரிவு அபாயம் காரணமாக மாத்தளை, தொடம்தெனி பிரதேசத்தில் 126 குடும்பங்களும் ஹட்டன் ரொத்தஸ் பகுதியில் 5 குடும்பங்களும் நேற்று(17)வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கேகாலை மாவட்டத்தில் ருவான்வெல, அங்குருவெல, கரவனெல்ல, தல்துவ ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால், மக்களின் இயல்பு வாழ்;கை முற்றாக பாதிப்படைந்துள்ளது.
ருவான்வெல, அங்குருவெல, கரவனெல்ல, தல்துவ ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் தொடர்ந்து தேங்கி இருப்பதால் அப்பகுதியில் இருந்து தொழிலுக்காக கேகாலைக்குச் செல்வோர் பாதிப்படைந்துள்ளனர்.
இதேவேளை, கேகாலை மாவட்டத்திலிருந்து இரத்தினபுரி மாவட்டத்துக்கு தொழிலுக்குச் செல்வோரும் பாதிப்படைந்துள்ளனர். இதனால், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலுள்ள அரச அலுவலகங்கள்;, திணைக்களங்களில் அரச அதிகாரிகள் மற்றும் சேவையாளர்களின்; வரவும் குறைவாகவே காணப்பட்டது.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக, கம்பளை ஸாஹிரா கல்லூரி மாணவர்கள் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக கல்லூரி அதிபர் ஏ.எல்.எம்.சிராஜ் தெரிவித்தார்.
மண்சரிவு அபாயம் காரணமாக கண்டி சேனநாயக்க மஹா வித்தியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதென அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் இரத்தினபுரி மாவட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளில் நேற்று(17) மாணவர்களின் வரவு குறைவாக காணப்பட்டதாக தெரியவருகிறது.
இரயில் சேவை பாதிப்பு
கொழும்பு-பதுளை இரவு நேர ரயில் சேவை நேற்று(17) இடைநிறுத்தப்பட்டதாக ரயில்வே நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வட்டவளை- தெத்திந்தவுக்கு இடைப்பட்ட இரயில் பாதையில் நேற்று(17) மதியம் 2 மணியளவில் வாகை மரம் விழுந்ததால் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிசென்ற இரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
பாதை அபிவிருத்தி அதிகார சபையினாரால் குறித்த மரம் பின்னர் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. பாதை சீர்கேடு காரணமாக கொழும்பு- பதுளைக்கான ரயில் சேவை நேற்ற இடைநிறுத்தப்பட்டது.
விவசாயம் பாதிப்பு
மலையகத்தில் மூன்று நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் விவசாயிகள் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். தோட்டங்களில் பயிரிடப்பட்ட மரக்கறிகள் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டதால் தாம்; பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அக்கரப்பத்தனை, டயகம, ஹோல்புறுக் போன்ற பகுதிகளில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, மரக்கறிகளின் விலை கனிசமாக உயர்வடைந்துள்ளது.
விபத்துக்கள் அதிகரிப்பு
இதேவேளை, மலையகத்தில் பிரதான வீதிகள் வழுக்கல் தன்மையுடன் காணப்படுவதாலும் பனிமூட்டம் அதிகரித்துள்ளதாலும் வீதி விபத்துக்கள் அதிகரித் துள்ளதாக தெரியவருகிறது. நுவரெலியா- பதுளை பிரதான வீதியில் தரித்து நின்ற முச்சக்கர வண்டியுடன் மற்றுமொரு முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று(17) மாலை இடம்பெற்றுள்ளது.
(செனரத் பண்டார, ஆஸிக், எம்.எம்.எம். ரம்ஸீன், ஷெல்டன், எஸ்.கணேசன், ரவிந்திர, மு.இராமச்சந்திரன், பா.திருஞானம், சிவாணிஸ்ரீ)
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago