2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு40 தாதியர்கள் நியமிக்கப்படுவர்

Editorial   / 2017 செப்டெம்பர் 03 , பி.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன், பா.திருஞானம்

ஹட்டன்- டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு, 25 வைத்தியர்களையும் 40 தாதியர்களையும் உடனடியாக நியமிக்குமாறு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பணிப்புரை விடுத்தார்.  

இதேவேளை, குறித்த வைத்தியசாலை, 150 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளை, சுகாதார அமைச்சினூடாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் மேற்கொண்டுள்ளார். 

ஹட்டன்-டிக்கோயா ஆதார வைத்தியசாலை, அண்மையில், அப்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால், வைபவ ரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது. இந்த வைத்தியசாலை, சகல வசதிகளையும் கொண்டு, தற்போது இயங்கி வருகின்றது. எனினும், தற்போது, அதிதீவிர சிகிச்சைப் பிரிவு உட்பட, பல பிரிவுகளில், தாதியர்கள் பற்றாக்குறை காணப்படுவதால், அதிதீவிர சிகிச்சைப் பிரிவு, ஸ்தம்பிதமடைந்து காணப்படுகின்றது. 104 தாதியர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது, 60 தாதியர்கள் மாத்திமே, கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். 44 தாதியர்களின் பற்றாக்குறை காணப்படுகின்றது.  

வைத்தியசாலையில் காணப்படும் இந்தத் தாதியர்கள் பற்றாக்குறை குறித்து, வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். விஜேதங்க, கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தவைவருமான வீ.இராதாகிருஸ்ணனின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். அதன் பின்னர், இராஜாங்க அமைச்சர், வைத்தியசாலைக்கான விஜயம் ஒன்றை, அண்மையில் மேற்கொண்டு, நிலைமையை நேரில் கண்டு, விடயங்களைக் கேட்டறிந்திருந்தார். இது தொடர்பாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன், டிக்கோயா வைத்தியசாலை உட்பட, நுவரெலியா வைத்தியசாலையில் காணப்படும் ஏனைய வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக, சுகாதார அமைச்சில் வைத்து, கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டிருந்தார். 

இந்தக் கலந்துரையாடலையடுத்து, தாதியர்கள் பற்றாக்குறைக் காணப்படும் டிக்கோயா வைத்தியசாலைக்கு, 40 தாதியர்கள் உடனடியாக நியமிப்பதற்கு, சுகாதார அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார். அத்துடன், 25 வைத்தியர்களுக்கான நியமனத்தையும் வழக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்தார். மேலும், இந்த வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய, 150 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

அதன் முதல் கட்டமாக, 35 மில்லியன் ரூபாய் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், கப் ரக வாகனம் மற்றும் வான் ஒன்று, வைத்தியசாலைக்கென்று கொள்வனவு செய்யப்படவுள்ளது. மேலும், கதிர்வீச்சுப் பிரிவுக்கான ஊழியர்கள், வைத்தியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்குமான தங்குமிட வசதிகள், மருந்தகம் ஆகியவை நிர்மாணிக்கப்படவுள்ளதோடு, பற்றாக்குறையாக இருக்கும் ஏனைய வைத்திய சேவைசார் அதிகாரிகளும் நியமிக்கப்படவுள்ளனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .