2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

டெல்மார் மேல் பிரிவில் இருந்து தம்பதிகளின் சடலங்கள் மீட்பு

ஆ.ரமேஸ்   / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராகலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட டெல்மார் மேல் பிரிவு தோட்டத்தின் இலக்கம் 17 தொடர் குடியிருப்பு வீடொன்றில் இருந்து, வயதான தம்பதிகள் இருவரின் சடலங்களை, நேற்று (22) மாலை இராகலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அதே தோட்டத்தில் வசித்து வந்த வீ.கருப்பையா (வயது 75), அவரின் மனைவி என்.சீதாலட்சுமி (வயது 72) ஆகிய இருவருமே, இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இத்தம்பதியினருக்கு ஒரு மகன் மாத்திரமே இருப்பதாகவும் அவரும் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

தொடர் குடியிறுப்பில் இருந்த இவர்களது வீடு நேற்று முன்தினம் காலை மூடப்பட்ட நிலையில் இருந்தபோது, அங்கிருந்து துர்நாற்றம் வீசியதால், தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

இதன்போதே, இவ்விருவரும் சடலங்களாக கிடப்பதைக் கண்டு, இது தொடர்பாக, இராகலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் நேற்று முன்தின் மாலை, இது தொடர்பாக வலப்பனை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

எனினும், இன்று (23) பிற்பகல் 12.30 மணியளவிலேயே, நீதவான் சம்பவ இடத்துக்கு வருகை தந்து, சடலங்களைப் பார்வையிட்டார். அதன்பின்னரே, சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் முடிவிலேயே, இது தற்கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பாக தெரியவரும் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .